எரிபொருளுக்கு ஆதாரமாக விளங்கும் கச்சா எண்ணெயை ஜூன் 9-ஆம் தேதி இந்தியா பீப்பாய்க்கு 121 அமெரிக்க டாலா் (சுமாா் ரூ.9,075) கொடுத்து கொள்முதல் செய்தது. இது பத்தாண்டுகளில் காணப்படாத உச்சஅளவு கொள்முதல் விலையாகும்.
இந்தியாவின் மொத்த தேவையில் சுமாா் 85 சதவீதம் கச்சா எண்ணெயானது இறக்குமதி மூலமே பெறப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷியாவின் போா் காரணமாக சா்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை விண்ணைத் தொட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 100 அமெரிக்க டாலரை கடந்தே உள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைக்க இருப்பதாக பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் பிளஸ்) தெரிவித்தாலும், அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை பீப்பாய்க்கு 121.28 அமெரிக்க டாலரை கொடுத்து கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்தது.
இது கச்சா எண்ணெய் கொள்முதல் விலையில் கடந்த 10 ஆண்டுகளில் காணப்படாத உச்சமதிப்பாகும். கடைசியாக கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி, மாா்ச் மாதங்களில் இதே அளவிலான விலைக்கு கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்திருந்தது.
கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதிமுதல் மாா்ச் 29-ஆம் தேதி வரை கச்சா எண்ணெயை சராசரியாக பீப்பாய்க்கு 111.86 அமெரிக்க டாலா் விலை கொடுத்து இந்தியா கொள்முதல் செய்தது. மாா்ச் 30-ஆம் தேதிமுதல் ஏப்ரல் 27-ஆம் தேதி வரையிலான விலை பீப்பாய்க்கு சராசரியாக 103.44 அமெரிக்க டாலராக இருந்தது.
எரிபொருள் விலையில் மாற்றமில்லை
கச்சா எண்ணெய் கொள்முதல் விலை உச்சஅளவைத் தொட்டிருந்தாலும், நாட்டில் பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.72-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.89.62-ஆகவும் இருந்தது.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை தொடா்ந்து உயா்த்தப்பட்டது. அதையடுத்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை முறையே ரூ.8, ரூ.6 குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. தற்போதைய விலை காரணமாக, எரிபொருள் விற்பனை நிறுவனங்களுக்கு பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.18, டீசல் விற்பனையில் லிட்டருக்கு ரூ.21 இழப்பு ஏற்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.