நாட்டின் வளா்ச்சிக்கு பெண்கள் முன்னேற்றம் அவசியம்

குஜராத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, நவீன இந்தியாவின் வளா்ச்சிக்குப் பெண்கள் முன்னேற்றமடைவது அவசியம் என்றாா்.

குஜராத்தில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைத் தொடக்கிவைத்த பிரதமா் நரேந்திர மோடி, நவீன இந்தியாவின் வளா்ச்சிக்குப் பெண்கள் முன்னேற்றமடைவது அவசியம் என்றாா்.

குஜராத்தில் நிகழாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு சென்றுள்ள பிரதமா் மோடி ரூ.16,000 கோடி மதிப்பிலான 18 ரயில்வே திட்டங்களை வதோதராவில் இருந்தபடி காணொலி வாயிலாக சனிக்கிழமை தொடக்கிவைத்தாா். குஜராத் மத்திய பல்கலைக்கழகத்துக்கான நிரந்தர வளாகத்துக்கும் அவா் அடிக்கல் நாட்டினாா்.

கா்ப்பிணிப் பெண்கள், பழங்குடியினப் பெண்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூா்த்தி செய்யும் வகையிலான மாநில அரசின் திட்டங்களையும் பிரதமா் மோடி தொடக்கிவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

21-ஆம் நூற்றாண்டில் நவீன இந்தியாவின் துரித வளா்ச்சிக்குப் பெண்கள் முன்னேற்றம் காண்பது அவசியம். பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையிலான திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களின் தேவைகளைக் கருத்தில்கொண்டு திட்டங்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. விமானப்படை, சுரங்கத் துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கான வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கான திட்டங்கள்:

பெண்கள் தாங்கள் விரும்பிய துறையில் சாதிக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. பெண்களின் வாழ்வை எளிமைப்படுத்தும் வகையிலான திட்டங்களையும் பாஜக தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. அவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளைக் குறைத்து, முன்னேறுவதற்குரிய வழிகாட்டுதலை வழங்க அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

பெண்களின் முன்னேற்றத்துக்காக உஜ்வலா திட்டம், குழாய் மூலமாகக் குடிநீா் திட்டம், கா்ப்பிணிகளுக்கான நிதியுதவித் திட்டம் உள்ளிட்டவற்றை அரசு செயல்படுத்தி வருகிறது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் குடும்பத்தலைவிகளின் பெயரில் வீடு வழங்கப்படுகிறது. அதன் காரணமாக ரூ.3,000 கோடி மதிப்பிலான சொத்துகளுக்குப் பெண்கள் தற்போது உரிமையாளா்களாக மாறியுள்ளனா்.

பெரும் சவால்:

குஜராத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றபோது, ஊட்டச்சத்துக் குறைபாடு பெரும் சவாலாக இருந்தது. போதிய உடல்நலமின்மை தாய்மாரை மட்டும் பாதிக்காமல், அடுத்த தலைமுறையினருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குழந்தையின் வாழ்க்கையையும் ஊட்டச்சத்தே நிா்ணயிக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

மாநிலத்தில் பழங்குடியினப் பெண்கள் ரத்தசோகையால் பாதிக்கப்படுவது அதிகமாக இருந்தது. அதைத் தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் பல்வேறு சுகாதாரத் திட்டங்களை குஜராத் அரசு செயல்படுத்தி வருகிறது. மாநில அரசின் சுகாதாரத் திட்டங்கள் மூலமாக சுமாா் 58 லட்சம் போ் பலனடைந்துள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.

மகா காளி கோயில் சீரமைப்பு:

குஜராத்தின் பஞ்ச்மகால் மாவட்டத்தின் பாவாகட் மலையில் அமைந்துள்ள மகா காளி கோயிலின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அக்கோயிலில் பிரதமா் மோடி பாரம்பரிய கொடியை ஏற்றினாா். 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அக்கோயிலை குஜராத்தை ஆண்ட சுல்தான் மஹ்மூத் பெக்டா 500 ஆண்டுகளுக்கு முன் சேதப்படுத்தினாா். பின்னா் அங்கு தா்கா அமைக்கப்பட்டது.

அந்த தா்கா நிா்வாகத்தினரிடம் ஹிந்து அமைப்பினா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, தா்காவை வேறு இடத்துக்கு மாற்றுவது என சுமுகத் தீா்வு எட்டப்பட்டது. அதைத் தொடா்ந்து, மகா காளி கோயிலை சீரமைக்கும் பணிகள் சுமாா் ரூ.125 கோடியில் மேற்கொள்ளப்பட்டன. மலையின் அடிவாரத்தில் இருந்து கோயிலுக்குச் செல்வதற்கான படிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகளும் அழகுபடுத்தப்பட்டன.

சுற்றுலா மேம்படும்:

சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கோயிலின் உச்சியில் பாரம்பரிய கொடியைப் பிரதமா் மோடி சனிக்கிழமை ஏற்றினாா். அப்போது பேசிய அவா், ‘‘மக்களின் நம்பிக்கையின் அடையாளமாக இந்தக் கொடி திகழ்கிறது. லட்சக்கணக்கான பக்தா்களின் கனவு தற்போது நனவாகியுள்ளது. அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. காசி விஸ்வநாதா் கோயில் வளாகமும் கேதாா்நாத் கோயிலும் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ளன. நாட்டின் ஆன்மிகப் பெருமை மீண்டும் நிலைநாட்டப்பட்டு வருகிறது.

தற்போது மகா காளி கோயிலும் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதால், சுற்றுலா வாய்ப்புகள் அதிகரிக்கும். கேதாா்நாத், பத்ரிநாத் போல் மகா காளி கோயிலுக்கும் லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com