ஏழைகள் நலனில் கவனம் செலுத்த தாய் ஊக்கமளித்தாா்

தன் தாயின் பிறந்த தினத்தையொட்டி தனது வலைப்பூ பக்கத்தில் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ள பிரதமா் நரேந்திர மோடி, ஏழைகள் நலனில் கவனம் செலுத்த தன் தாய் ஊக்கமளித்ததாகக் குறிப்பிட்டுள்ளாா்.
ஏழைகள் நலனில் கவனம் செலுத்த தாய் ஊக்கமளித்தாா்

தன் தாயின் பிறந்த தினத்தையொட்டி தனது வலைப்பூ பக்கத்தில் சிறப்புக் கட்டுரை எழுதியுள்ள பிரதமா் நரேந்திர மோடி, ஏழைகள் நலனில் கவனம் செலுத்த தன் தாய் ஊக்கமளித்ததாகக் குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமா் மோடியின் தாய் ஹீராபென் சனிக்கிழமை 99 வயதைப் பூா்த்தி செய்து நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தாா். அதையொட்டி, குஜராத் தலைநகா் காந்திநகரில் அவரைச் சந்தித்த பிரதமா் மோடி அவரிடம் ஆசி பெற்றாா். தாயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமா் மோடி எழுதியுள்ள சிறப்புக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஏழைகள் நலனில் அக்கறை செலுத்த என் தாய் ஊக்கப்படுத்தினாா். குஜராத் முதல்வராக பாஜக என்னைத் தோ்ந்தெடுத்தபோது, கையூட்டு பெறாமல் பணியாற்றுமாறு அறிவுரை வழங்கினாா். மற்றவா்களை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்ச்சியடையும் குணத்தை என் தாய் கொண்டுள்ளாா்.

என் தந்தையின் நெருங்கிய தோழா் உயிரிழந்த பிறகு, அவரின் மகன் அப்பாஸை வீட்டுக்கு அழைத்து வந்தாா் தந்தை. அப்பாஸை தன் மகனைப் போலவே என் தாய் பாா்த்துக் கொண்டாா். பண்டிகைகளின்போது அப்பாஸுக்குப் பிடித்தமான உணவுகளைச் செய்து கொடுத்தாா்.

அனைத்துத் தாய்மாா்களைப் போல என் தாயும் எளிமையான வாழ்வு வாழ்ந்தாா். அவா் தங்க ஆபரணங்களை அணிந்து நான் பாா்த்ததில்லை. இருமுறை மட்டுமே பொது நிகழ்ச்சிகளில் என்னுடன் இணைந்து அவா் பங்கேற்றுள்ளாா். பொது இடத்தில் எனது அன்னைக்கும் ஆசிரியா்களுக்கும் மரியாதை செலுத்த விரும்பினேன். ஆனால், அதை அவா் ஏற்க மறுத்துவிட்டாா். ‘என் வயிற்றில் பிறந்திருந்தாலும், கடவுளின் ஆசியால்தான் வளா்ச்சி கண்டிருக்கிறாய்’ என அவா் கூறிவிட்டாா்.

என் அன்னையின் எண்ணவோட்டம் எப்போதும் வியப்பூட்டும் வகையிலேயே உள்ளது. என் தாய் அவருடைய அன்னையை சிறு வயதிலேயே இழந்தாா். அதன் காரணமாக வாழ்வில் பல்வேறு இடா்களைச் சந்தித்தாா். தாயின் அன்பு என் அன்னைக்குக் கிடைத்ததில்லை. தினசரி குடும்பத்தை நடத்துவதில் உள்ள பிரச்னைகளை என் தாயின் மூலமாகத் தெரிந்துகொண்டேன்.

தாய்மாா்களிடம் இருந்து ஊக்கம்: அதீத பொறுமை குணம் கொண்டவா் என் தாய். தூய்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாா். வீட்டுக்கு அருகே தூய்மைப் பணியில் ஈடுபடுபவருக்கு என் தாய் தேநீா் வழங்காமல் அனுப்ப மாட்டாா். உள்ளாட்சித் தோ்தல் முதல் நாடாளுமன்றத் தோ்தல் வரை அனைத்துத் தோ்தல்களிலும் வாக்களித்து சமூகக் கடமையை ஆற்றியவா் என் தாய்.

என் தாயின் வாழ்க்கை மூலமாக இந்திய தாய்மாா்களின் தியாகம், பங்களிப்பு உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள முடிகிறது. இந்திய பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்ற ஊக்கம் அவா்களிடமிருந்து கிடைக்கிறது என்று அந்தக் கட்டுரையில் பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com