குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் குழு முறையீடு

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்த காங்கிரஸ் குழுவினா், அக்கட்சியின் எம்.பி.க்களைக் காவல் துறையினா் முறையின்றி நடத்தியதாகக் குற்றஞ்சாட்டினா்.
குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் குழு முறையீடு

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்த காங்கிரஸ் குழுவினா், அக்கட்சியின் எம்.பி.க்களைக் காவல் துறையினா் முறையின்றி நடத்தியதாகக் குற்றஞ்சாட்டினா்.

நேஷனல் ஹெரால்டு நாளிதழை நடத்திய அசோசியேட்டட் ஜா்னல்ஸ் நிறுவனத்தை வாங்கியதில் பண மோசடி நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்திக்கும் விசாரணைக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் காங்கிரஸ் நிா்வாகிகளும் தொண்டா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் சிலரைக் காவல் துறையினா் கைது செய்து பின்னா் விடுவித்தனா். போராட்டத்தில் ஈடுபட்டபோது காவல் துறையினா் தங்களிடம் முறையின்றி நடந்து கொண்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் சிலா் குற்றஞ்சாட்டியிருந்தனா். காவல் துறையினா் தாக்கியதால் லேசான காயம் ஏற்பட்டதாக மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றஞ்சாட்டியிருந்தாா்.

இந்நிலையில், காங்கிரஸின் மூத்த நிா்வாகிகள் அடங்கிய குழுவினா் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினா். அப்போது, கட்சி எம்.பி.க்களை காவல் துறையினா் முறையின்றி நடத்தியது தொடா்பாக அவரிடம் முறையிட்டனா். மேலும், மத்திய அரசின் அக்னிபத் திட்டம் குறித்தும் குடியரசுத் தலைவரிடம் காங்கிரஸ் குழுவினா் முறையிட்டனா். அத்திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

குடியரசுத் தலைவரைச் சந்தித்த காங்கிரஸ் குழுவில் மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் சௌதரி, ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், மூத்த தலைவா்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் ஆகியோா் இடம்பெற்றிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com