கவிழும் நிலையில் மகாராஷ்டிர கூட்டணி அரசு: சிவசேனை அமைச்சர், 15 எம்எல்ஏ-க்கள் குஜராத்தில் முகாம்

சிவசேனையின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் குஜராத்தில் முகாமிட்டுள்ளதால், மகாராஷ்டிர கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிவசேனையின் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, அக்கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏ-க்கள் ஆகியோர் குஜராத்தில் முகாமிட்டுள்ளதால், மகாராஷ்டிர கூட்டணி அரசு பெரும்பான்மையை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.
 மகாராஷ்டிரத்தில் சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கட்சிகளைக் கொண்ட மகா விகாஸ் அகாடி கூட்டணியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு அண்மையில் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 6 இடங்களில் பாஜக 3 இடங்களையும், சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தலா ஓரிடத்தையும் கைப்பற்றின. பாஜகவுக்கு இரு இடங்கள் மட்டுமே கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனை வேட்பாளரைத் தோற்கடித்து பாஜக கூடுதலாக ஓரிடத்தைக் கைப்பற்றியது.
 அதேபோல், மாநில சட்டமேலவைத் தேர்தலிலும் பாஜக 4 இடத்தைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக ஓரிடத்தைக் கைப்பற்றியது. அதனால், மகா விகாஸ் அகாடி கூட்டணிக்குள் ஒத்துழைப்பு காணப்படவில்லை எனப் பலரும் குற்றஞ்சாட்டினர். தேர்தலின்போது சிவசேனையை சேர்ந்த சில எம்எல்ஏ-க்கள் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும் புகார் எழுந்தது.
 இந்நிலையில், சிவசேனையை சேர்ந்த மாநில அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவாளர்களான சுமார் 15 எம்எல்ஏ-க்களுடன் குஜராத்தின் சூரத்தில் முகாமிட்டுள்ளார். அவர்களைத் தற்போது தொடர்புகொள்ள முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக ஏக்நாத் ஷிண்டே எந்த விளக்கத்தையும் இதுவரை அளிக்காத நிலையில், அவர் பாஜகவில் இணைந்து ஆட்சி மாற்றத்துக்கு வழிவகுப்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
 பாஜக ஆட்சியமைப்பதற்காக ஏக்நாத் ஷிண்டே ஆதரவு தர முன்வந்தால், அதுகுறித்து நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும் எனவும் பாஜக தெரிவித்துள்ளது.
 ஆட்சிக்கு பாதிப்பில்லை-சரத் பவார்: இந்த விவகாரத்தால் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என தேசியவாத காங்கிரஸும் காங்கிரஸும் தெரிவித்துள்ளன.
 கட்சிப் பதவி பறிப்பு: மகாராஷ்டிர பேரவையில் சிவசேனை குழு தலைவர் பதவி அமைச்சர் ஷிண்டேவுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அப்பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார்.
 அசாதாரண சூழலுக்கிடையே, ஏக்நாத் ஷிண்டே ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், "ஹிந்துத்துவம் குறித்து கற்பித்த பாலாசாஹேப் தாக்கரேவின் சிவ சேவகர்களாகிய நாங்கள், ஆட்சி அதிகாரத்துக்காக ஏமாற்ற மாட்டோம். பால் தாக்கரேவின் கற்பிதங்களையும் கைவிடமாட்டோம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 ஆட்சி கவிழுமா?: 288 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டப்பேரவையில் சிவசேனைக்கு 55 உறுப்பினர்களும், தேசியவாத காங்கிரஸுக்கு 53 உறுப்பினர்களும், காங்கிரஸுக்கு 44 உறுப்பினர்களும் உள்ளனர்.
 எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 106 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். பகுஜன் விகாஸ் அகாடி கட்சிக்கு 3 உறுப்பினர்களும், சமாஜவாதி, மஜ்லிஸ் கட்சி, பிரஹார் ஜனசக்தி கட்சி ஆகியவற்றுக்கு தலா இரு எம்எல்ஏ-க்களும் உள்ளனர். 13 பேர் சுயேச்சை உறுப்பினர்களாக உள்ளனர்.
 ஆளும் கூட்டணிக்குத் தற்போது 152 எம்எல்ஏ-க்களின் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு 144 எம்எல்ஏ-க்களின் ஆதரவு தேவை. அதிருப்தி சிவசேனை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தால், ஆளும் கூட்டணி பெரும்பான்மையை இழக்கும். மற்ற கட்சியைச் சேர்ந்தவர்களும், சுயேச்சைகளும் ஆதரவளிக்கும்பட்சத்தில், பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com