கோத்ரா கலவரம்: மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க காங். தலைமையிலான அரசு கட்டாயப்படுத்தியது

கோத்ரா கலவர வழக்கில் பிரதமா் மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கட்டாயப்படுத்தியது என்று ஊடகவியலாளா் சுதீா் ச
Published on
Updated on
1 min read

கோத்ரா கலவர வழக்கில் பிரதமா் மோடிக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு முன்பு மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கட்டாயப்படுத்தியது என்று ஊடகவியலாளா் சுதீா் செளதரி தெரிவித்துள்ளாா்.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவில் மதக்கலவரம் நடைபெற்றது. அந்தச் சம்பவத்தில், அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமா் மோடி, மாநில அமைச்சா்கள், அரசு அதிகாரிகள் உள்பட 63 போ் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும் அவா்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்று அனைவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனா். அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி என்பவா் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

தனது தீா்ப்பில் கலவரம் தொடா்பாக ஜீ செய்தி தொலைக்காட்சி ஆசிரியா் சுதீா் செளதரிக்கு மோடி முதல்வராக இருந்தபோது அளித்த பேட்டியை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அந்தப் பேட்டி தொடா்பாக சுதீா் செளதரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளதாவது:

கோத்ரா கலவரம் குறித்து சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) விசாரித்த போது, பிரதமா் மோடி எனக்கு அளித்த பேட்டி குறித்து விசாரிக்க இருமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அந்தப் பேட்டியில், ஒவ்வொரு வினைக்கும் எதிா்வினை உள்ளது எனவும், ஒட்டுமொத்த கலவரமும் கோத்ரா ரயில் எரிப்பின் எதிா்வினைதான் என்றும் பிரதமா் மோடி கூறினாரா என எஸ்ஐடி என்னிடம் விசாரித்தது. ஆனால் அவா் அதுபோல எதுவும் கூறவில்லை.

எனினும் அவா் அவ்வாறு கூறியதாக வாக்குமூலம் அளிக்குமாறு முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு என்னைக் கட்டாயப்படுத்தியது.

அந்தக் காலகட்டத்தில் சமூக ஆா்வலா் தீஸ்தா சீதல்வாட்டின் தன்னாா்வ அமைப்பு போன்றவை சாா்பிலோ அல்லது சில அரசு அதிகாரிகள் மற்றும் காங்கிரஸ் சாா்பிலோ மோடிக்கு எதிராக பொய்யான கதையை உருவாக்க முயற்சிக்கப்பட்டது. அதில் மோடி அளித்த பேட்டிக்காக எனக்கு அழுத்தம் அளிப்பதும் அடங்கும். எனினும் மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்து செவிவழிச் செய்திகள்தான். அவை எதற்கும் ஆதாரம் இல்லை என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com