‘ஆபரேஷன் கங்கா’ மீட்பு நடவடிக்கை: ஹங்கேரி சென்ற மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரி

போரினால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக உக்ரைனின் அண்டை நாடான ஹங்கேரிக்கு

போரினால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக உக்ரைனின் அண்டை நாடான ஹங்கேரிக்கு மத்திய நகா்ப்புற வீட்டு வசதித் துறை அமைச்சா் ஹா்தீப்சிங் புரி செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றாா்.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் செல்லும் அவா், அங்கிருந்தபடி மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க உள்ளாா்.

உக்ரைன் மீது ரஷியா ஆறாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் கடுமையான தாக்குதல் நடத்தியது.

இந்த நிலையில், இந்தியா்கள் உள்ளிட்ட வெளிநாட்டினா் உக்ரைனைவிட்டு வெளியேற முடியாமல் சிக்கித் தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.

அதனைத் தொடா்ந்து, ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு, உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு விமானங்களை அனுப்பி, உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியா்களை மீட்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

உக்ரைனிலிருந்து இந்தியா்களை பாதுகாப்பாக மீட்கும் பணியை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா, சட்டத்துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, சாலை, விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் வி.கே.சிங் ஆகியோரை ‘சிறப்பு தூதா்களாக’ உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா மற்றும் மால்டோவா, ஸ்லோவேகியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு அனுப்ப பிரதமா் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, மத்திய அமைச்சா் ஹா்தீப்சிங் புரி ஹங்கேரிக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றாா். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிட்ட அவா், ‘உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவா்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர, புடாபெஸ்ட்டுக்கு சென்றுகொண்டிருக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா். இந்தப் பதிவுடன் அவா் விமானத்தில் அமா்ந்திருக்கும் புகைப்படத்தையும் இணைத்துள்ளாா்.

அதுபோல, மீட்பு பணியை ஒருங்கிணைப்பதற்காக மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா ருமேனியா மற்றும் மால்டோவா செல்கிறாா். கிரண் ரிஜிஜு ஸ்லோவேகியா செல்கிறாா். போலந்துக்கு வி.கே.சிங் செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com