புது தில்லி: தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு கூடுதல் பேரிடர் நிதியுதவியாக ரூ. 1,682.11 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.
2021-ஆம் ஆண்டில் தமிழகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் தொடர் மழை, வெள்ளப்பெருக்கால் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டது. இதேபோன்று வடமாநிலங்களில் ஹிமாசல பிரதேசம் போன்ற மலைப்பிரதேச மாநிலங்களில் நிலச்சரிவால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையொட்டி, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றுக்கு கூடுதல் மத்திய பேரிடர் நிதியுதவியாக ரூ. 1,682.11 கோடியை தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்து (என்டிஆர்எஃப்) வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, தமிழகத்துக்கு ரூ. 352.85 கோடியும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு ரூ. 17.86 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திரம் (ரூ.351.43), கர்நாடகம் (ரூ.492.39), மகராஷ்டிரம் (ரூ.355.39), ஹிமாசல பிரதேசம் (ரூ.112.19) ஆகிய மாநிலங்களுக்கும் இந்த நிதி மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இது நிகழ் நிதியாண்டின் கூடுதல் நிதியுதவி என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் நிதியுதவி 2021-22 நிதியாண்டுக்கு ஏற்கெனவே ரூ.17,747 கோடி, 28 மாநிலங்களின் மாநிலப் பேரிடர் மீட்பு நிதியத்துக்கு (எஸ்டிஆர்எஃப்) வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய பேரிடர் மீட்பு நிதியத்திலிருந்தும் 8 மாநிலங்களுக்கு ரூ. 4,645.92 கோடி என மொத்தம் இதுவரை ரூ.22,393.12 கோடி வழங்கப்பட்டுள்ளதாக பேரிடர் நிவாரணங்களுக்கு பொறுப்பு வகிக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வியாழக்கிழமை ஒதுக்கப்பட்ட நிதி ஏற்கெனவே வழங்கப்பட்ட நிதிக்கு அப்பாற்பட்டதாகும். இயற்கைப் பேரிடர்களை எதிர்பாராது எதிர்கொண்ட இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவுவது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாநிலங்களுக்கு பல்துறை அமைச்சகங்களின் அதிகாரிகள் அடங்கிய குழுவை மத்திய அரசு அனுப்பி, சேதங்களை மதிப்பீடு செய்தது. தமிழகத்தில் வெள்ளச் சேதம் தொடர்பாக மாநில அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ரூ. 6,230 கோடிக்கான குறிப்பாணையைச் சமர்ப்பித்திருந்தது. வெள்ள நிவாரணம், ஜிஎஸ்டி போன்ற வகைகளில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை, மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி தில்லிக்கு வந்து கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.