உ.பி. தேர்தலில் 2 சாதனைகளைப் படைத்த பாஜக வேட்பாளர்கள்

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
உ.பி. தேர்தலில் 2 சாதனைகளைப் படைத்த பாஜக வேட்பாளர்கள்
உ.பி. தேர்தலில் 2 சாதனைகளைப் படைத்த பாஜக வேட்பாளர்கள்


உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி பாஜக சாதனை படைத்தது மட்டுமல்லாமல், இரண்டு வேட்பாளர்களும் புதிய சாதனைகளைப் படைத்துள்ளனர்.

சாஹிபாபத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சுனில் குமார் ஷர்மா, 2.14 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மாநிலத்திலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக சாஹபாபத் உள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதுபோல, பாஜக எம்எல்ஏவாக இருக்கும் நொய்டாவைச் சேர்ந்த பங்கஜ் சிங்  மீண்டும் தனது தொகுதியில் போட்டியிட்டு வென்றுள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டில் 1.04 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றிருந்த நிலையில் தற்போது 1.81 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

இவ்விரண்டு சாதனைகள் மூலம், தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார், கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலில் பரமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தேசிய சாதனை படைத்திருந்தது முறியடிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள்..
உத்தர பிரதேசத்தில் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே பாஜக முன்னிலையில் இருந்தது. இன்று காலை நிலவரப்படி 255 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் ஆட்சியமைப்பதற்குத் தேவையானதைவிட அதிக இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்றது. உத்தர பிரதேச பேரவைத் தோ்தலில் ஒரே கட்சி தொடா்ந்து இருமுறை தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த வெற்றி மூலமாக மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடா்ந்து இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்கவுள்ளாா். மத்திய அரசு இயற்றிய புதிய வேளாண் சட்டங்கள், லக்கீம்பூா் கெரி வன்முறை உள்ளிட்ட விவகாரங்கள் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்களிடம் ஏற்படுத்தும் என அரசியல் நோக்கா்கள் கணித்திருந்த நிலையில், அவற்றைப் பொய்யாக்கி பாஜக வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் முக்கிய போட்டியாளராகக் கருதப்பட்ட சமாஜவாதி கட்சி 111 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு தோ்தலுடன் ஒப்பிடுகையில் சமாஜவாதி கட்சி கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியிருந்தாலும், அவை ஆட்சியமைப்பதற்குப் போதுமானதாக இல்லை. தற்போது பலம் வாய்ந்த எதிா்க்கட்சியாக பேரவையில் சமாஜவாதி திகழ உள்ளது.

மாநிலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த காங்கிரஸுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அக்கட்சியின் பொதுச் செயலா் பிரியங்கா, மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோதிலும் அக்கட்சி 2 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. முன்னாள் முதல்வா் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலையில் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com