ஆயுதப்படை தயாரிப்பு பள்ளிக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படும்: கேஜரிவால்
ஆயுதப் படைகளுக்கு மாணவர்களைத் தயார்ப்படுத்துவதற்காக, திறக்கப்படவுள்ள புதிய பள்ளிக்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
கடந்த 1931 மார்ச் 23-ல் ஷஹீத்-இ-ஆசம் பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். அவரின் நினைவுதினத்தை முன்னிட்டு ஜரோடா கலனில் உள்ள 14 ஏக்கர் வளாகத்தில் அதிநவீன வசதிகளுடன் பள்ளி அமைக்கப்படுகிறது.
முன்னதாக, தில்லியில் ஆயுதப் படை தயாரிப்புக்கு ஒருபள்ளி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, அந்த பள்ளிக்கு ஷாஹீத் பகத் சிங் ஆயுதப்படை தயாரிப்பு பள்ளி என்று பெயரிடப்படும் என்று அவர் ஒரு ஆன்லைன் மாநாட்டில் தெரிவித்தார்.
மேலும், இது குடியிருப்புப் பள்ளியாக இருக்கும் என்றும், மாணவர்களிடம் கட்டணம் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
பள்ளியில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். ஒவ்வொரு வகுப்பிலும் 100 -- 200 இருக்கைகள் இருக்கும். 200 இடங்களுக்கு ஏற்கனவே 18,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
9-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு மார்ச் 27-ஆம் தேதி திறனறித் தேர்வும், 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான தேர்வு நாளை மறுநாள் நடைபெறும். இரண்டாம் கட்டமாக நேர்காணல் நடத்தப்படும் என்றார்.
ராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை அதிகாரிகள் மாணவர்களுக்குக் கற்பிப்பார்கள் என அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.