கரோனா 4-ஆவது அலை குறித்த ஆய்வுகள் தீவிரம்: மத்திய அரசு

கரோனா தீநுண்மியின் நான்காவது அலை உருவாகிறதா என்பதை நிபுணர்கள் குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
கரோனா 4-ஆவது அலை குறித்த ஆய்வுகள் தீவிரம்: மத்திய அரசு
Published on
Updated on
1 min read

கரோனா தீநுண்மியின் நான்காவது அலை உருவாகிறதா என்பதை நிபுணர்கள் குழு உன்னிப்பாக கவனித்து வருகிறது என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
 நான்காவது அலை தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதன் முடிவுகளில் சிறு வேறுபாடுகள் இருப்பதால் நம்பத்தகுந்த முடிவுகளைப் பெறுவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் அளித்த பதில் விவரம் வருமாறு:
 இந்தியன் சார்ஸ்-கோவ்2-ஜெனோமிக்ஸ் கன்சோர்டியம் (ஐஎன்எஸ்ஏசிஓஜி) ஆய்வகங்களின் மொத்த அமைப்பும்
 பல்வேறு உருமாற்றம் அடைந்த கரோனா தீநுண்மியின் மரபணு மாதிரிகளை சேகரித்து, அதன் அடுத்தகட்ட அலைகளைக் கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகிறது.
 நாட்டில் ஜூன், ஆகஸ்ட் மாத்தில் கரோனா தீநுண்மியின் 4-ஆவது அலைகள் ஏதும் இந்திய ஐஐடி நிறுவனங்களால் கண்டறியப்படவில்லை.
 ஐஐடி நிறுவனங்களின் கணிதம் மற்றும் புள்ளியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் கொண்ட குழு, இதுதொடர்பாக சுதந்திரமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இக்குழு ஒரு மாதிரி அறிக்கையை சமர்ப்பித்தது. எனினும் அது நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்படவில்லை.
 இந்த ஆய்வுகள் அனைத்தும் சிறு மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டு ஒட்டுமொத்த மக்கள்தொகைக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டியதாகும். இதன் முடிவுகள் சிறிய பிராந்திய அளவிலோ அல்லது ஒரே மாதிரியான பாதிப்புகளைக் கொண்ட நாடுகளுக்கோ சரியான முடிவுகளைத் தரலாம் என்றாலும், இதுபோன்ற தொழில்நுட்பங்கள் அதிக மக்கள்தொகைக்கு நம்பத் தகுந்த முடிவுகளைக் கொடுப்பதில் தொடர்ந்து தவறி வருகின்றன.
 உருமாற்றம் அடைந்த கரோனா தீநுண்மியின் பல்வேறு வகைகள் மற்றும் பொது சுகாதாரத்தில் அதனால் ஏற்பட்ட தாக்கங்களைக் கருத்தில்கொண்டு உலகளாவிய கரோனா தீநுண்மியின் நான்காவது வகை உருமாற்றத்தைக் கண்டறிய அத்தீநுண்மியின் வளர்ச்சியை பல்வேறு நிபுணர்கள் குழுவுடன் மத்திய அரசு மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
 கரோனா மற்றும் பிற பொது சுகாதார ஆபத்துகளை எதிர்கொள்வதற்கான ஆயத்த நடவடிக்கைகளாக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தேவைக்கான தொழில்நுட்ப உதவிகள் மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
 நாட்டில் மீண்டும் கரோனா பரவலைத் தடுக்கவும் பொது சுகாதாரத்தை வலுப்படுத்தவும் தேசிய சுகாதார இயக்கம் (என்எச்எம்), மாநில பேரழிவு நிவாரண நிதி அமைப்புகள் மூலம் மாநிலங்களுக்கு நிதி உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சோதனை- தடுத்தல்- பரிசோதனை- தடுப்பூசி- கரோனா சார்ந்த நடவடிக்கைகள் என ஐந்துகட்ட பணிகள் மூலம் நிபுணர்கள் குழு மற்றும் மாநிலங்களுடன் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com