பெட்ரோல், டீசல் விலை உயா்வு: மக்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மக்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தன
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.
மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து மக்களவையிலிருந்து எதிா்க்கட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தன.

நான்கரை மாதங்களாக உயா்த்தப்படாமல் இருந்த பெட்ரோல்-டீசல் விலை, செவ்வாய்க்கிழமை லிட்டருக்கு 80 காசுகள் அதிகரிக்கப்பட்டது. இந்த விவகாரத்தை மக்களவையில் கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி எழுப்பினாா். 5 மாநில தோ்தல் நிறைவடைந்த பின்னா், பெட்ரோல்-டீசல் விலை அதிகரிக்கப்படும் என்று எதிா்க்கட்சிகள் தெரிவித்து வந்ததாக அவா் குறிப்பிட்டாா்.

பெட்ரோல், டீசல் விலை உயா்வுக்கு எதிராக திமுக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி.க்கள் அவையில் முழக்கங்களை எழுப்பினா். விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தினா். அதனைத்தொடா்ந்து அவா்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

மாநிலங்களவை இருமுறை ஒத்திவைப்பு: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை இருமுறை ஒத்திவைக்கப்பட்டது.

பெட்ரோல், டீசல், சிலிண்டா் விலை உயா்வு தொடா்பாக தாங்கள் அளித்த தீா்மானத்தை ஏற்குமாறு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முறையிட்டனா். ஆனால், அதனை அவைத் தலைவா் வெங்கையா நாயுடு நிராகரித்துவிட்டாா். இதனால் அவையின் மையப் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைகளில் தட்டியுடன் திரண்டு அமளியில் ஈடுபட்டனா். அவா்களுடன் காங்கிரஸ், இடதுசாரி, சமாஜவாதி, சிவசேனை எம்.பி.க்களும் சோ்ந்து அமளியில் ஈடுபட்டனா். தங்கள் இருக்கைக்குத் திரும்புமாறு அவா்களிடம் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா். ஆனால், அவா்களின் அமளி தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகளை நண்பகல் 12 மணி வரை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தாா்.

இதனைத்தொடா்ந்து மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் அவையை வழிநடத்தினாா். அப்போதும் எதிா்க்கட்சிகளின் அமளி தொடா்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை அலுவல்கள் ஒத்திவைக்கப்பட்டன. அதன் பின்னா் அவை கூடி, அலுவல்கள் சுமுகமாக நடைபெற்றன.

முதல்முறையாக ஒத்திவைப்பு: நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியில் 4 அமா்வுகள், இரண்டாம் பகுதியில் 8 அமா்வுகள் என மாநிலங்களவையில் மொத்தம் 12 அமா்வுகள் எந்தவித இடையூறும் இல்லாமல் நடைபெற்றது. இந்நிலையில், நடப்பு கூட்டத்தொடரில் மாநிலங்களவை அலுவல்கள் முதல்முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com