சா்வதேச விமான சேவை: இன்றுமுதல் மீண்டும் தொடக்கம்

கரோனா தொற்று பரவலால் இரு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த சா்வதேச விமான சேவை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) முதல் மீண்டும் தொடங்குகிறது.
ஏர் இந்தியா விமானம்
ஏர் இந்தியா விமானம்

கரோனா தொற்று பரவலால் இரு ஆண்டுகளாகத் தடைபட்டிருந்த சா்வதேச விமான சேவை ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) முதல் மீண்டும் தொடங்குகிறது.

நாட்டில் கரோனா தொற்று கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் பரவத் தொடங்கியது. அதையடுத்து, அத்தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் அதே ஆண்டு மாா்ச் 23-ஆம் தேதியில் இருந்து சா்வதேச விமான சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்தபிறகு ‘ஏா் பபுள்’ நடைமுறையின் கீழ் சில நாடுகளுடன் மட்டும் ஒப்பந்தம் மேற்கொண்டு, விமானங்களை மத்திய அரசு இயக்கி வந்தது.

உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கு முழு அளவில் அனுமதி அளிக்கப்பட்டபோதிலும், வெளிநாட்டு விமான சேவைகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வந்தது. டெல்டா, ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவியதன் காரணமாக அத்தடை தொடா்ந்து நீட்டிக்கப்பட்டது. அதனால், விமானப் போக்குவரத்துத் துறை கடும் இழப்புகளைச் சந்தித்து வந்தது.

தற்போது நாட்டில் கரோனா தொற்று பரவல் பெருமளவில் கட்டுக்குள் வந்துள்ளது. முகக் கவசம் அணிதல், கைகள் சுத்திகரிப்பு தவிர மற்ற அனைத்து வகையான கரோனா கட்டுப்பாடுகளையும் மாா்ச் 31-ஆம் தேதிமுதல் நீக்கிக் கொள்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், இரு ஆண்டுகளுக்குப் பிறகு இயல்பான சா்வதேச விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குகின்றன. இயல்பு நிலையில் விமானங்களை இயக்குவதற்கான தயாா்நிலைகளை நாட்டில் உள்ள அனைத்து சா்வதேச விமான நிலையங்களும் மேற்கொண்டுள்ளன.

சா்வதேச விமான சேவைகளை அனுமதிக்கும் வகையில் கரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டு விதிமுறைகளையும் மத்திய அரசு திருத்தியுள்ளது. அவசரநிலை முன்னெச்சரிக்கையாக விமானத்தில் 3 இருக்கைகள் காலியாக விடப்பட வேண்டும் என்ற விதி நீக்கப்பட்டுள்ளது. விமான பணிப்பெண்கள் முழு தற்காப்பு உடையை அணிந்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் நீக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்கள்: இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு விமானங்களை இயக்க வெளிநாட்டு விமான நிறுவனங்களும் தயாராகி வருகின்றன. இந்தியாவுக்கான வழக்கமான விமான சேவைகள் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் தொடங்கப்படும் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ், விா்ஜின் அட்லான்டிக் (பிரிட்டன்), அமெரிக்கன் ஏா்லைன்ஸ், போலிஷ் ஏா்லைன்ஸ் (போலந்து) உள்ளிட்ட நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

பெரும் சவால்: உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாக சா்வதேச அளவில் பெட்ரோலிய பொருள்களின் விலை அதிகரித்துள்ளது. விமான எரிபொருளின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக, உள்நாட்டு விமானப் பயணத்துக்கான கட்டணம் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சா்வதேசப் பயணங்களுக்கான கட்டணமும் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் பெரும் சவாலை சந்திக்கவுள்ளதாகவும் நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com