மத்திய அரசு ஊழியா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு

மத்திய அரசு ஊழியா்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயா்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் ஊழியா்கள், ஓய்வூதியதாரா்கள் என மொத்தம் 1.16 கோடி போ் பலனடைவா்.
மத்திய அரசு ஊழியா்களுக்கு 3% அகவிலைப்படி உயா்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம், மத்திய அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 1.16 கோடி பேர் பலனடைவர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 34 சதவீதமாக வழங்கப்படும். 2022, ஜனவரி 1-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு இந்த அகவிலைப்படி வழங்கப்படும். 7-ஆவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி, அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் மத்திய அரசின் ஊழியர்கள் 47.68 லட்சம் பேரும், ஓய்வூதியதாரர்கள் 68.62 லட்சம் பேரும் பலனடைவார்கள். 
அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9,544.50 கோடி கூடுதலாக செலவாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்கப்பட்டது. இது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்தேதியிட்டு 
வழங்கப்பட்டது.
எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு உலக வங்கி ரூ.6,062 கோடி உதவி: உலக வங்கியின் உதவியுடன் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) செயல்திறனை மேம்படுத்தும் திட்டத்துக்கு 80.8 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 6,062.45 கோடி) வழங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 2022-23-ஆம் நிதியாண்டில் தொடங்கும் இந்தத் திட்டத்துக்கு உலக வங்கி 50 கோடி டாலர் (ரூ.3750 கோடி) கடனுதவி அளிக்கும். மீதமுள்ள 30.8 கோடி டாலரை (ரூ.2,312.45 கோடி) மத்திய அரசு அளிக்கும்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் திறனை தேசிய அளவில் விரிவுபடுத்துவதுடன் மாநிலங்களில் செயல்படுத்தும் திறன் மற்றும் தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.
10 மெகா மின்திட்டங்கள்: "மெகா திட்டங்கள்' என்ற சான்றிதழைப் பெறுவதற்கு வரித் துறையினரிடம்  உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு 10 மின் திட்டங்களுக்கு மேலும் 36 மாதங்கள் (3 ஆண்டுகள்) அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த இடைப்பட்ட காலத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், மின்சாரம்  கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளிகளில் பங்கேற்க இயலும். வரிவிலக்குப் பெறவும் ஏதுவாக இருக்கும் என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 இலகு ரக ஹெலிகாப்டர்கள் கொள்முதல்
பாதுகாப்புப் படைகளுக்காக ரூ.3,887 கோடியில் 15 இலகு ரக ஹெலிகாப்டர்களைக் கொள்முதல் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் ரூ.377 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 15 ஹெலிகாப்டர்களில், 10 ஹெலிகாப்டர்கள் விமானப் படையிலும், 5 ஹெலிகாப்டர்கள் ராணுவத்திலும் சேர்க்கப்படும். இந்த ஹெலிகாப்டர்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். அரசின் நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் இந்த ஹெலிகாப்டர்களைத் தயாரிக்கவுள்ளது. போர் விமானங்களுக்காக இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவே உள்நாட்டில்  இந்த ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்படவுள்ளன.
சீன எல்லை உள்ளிட்ட இடங்களில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதற்காக, முப்படைகளையும் தயார்படுத்தும் நோக்கத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. இந்த ஹெலிகாப்டர்களை நகர்ப்புறங்கள், அடர்ந்த வனப் பகுதி, உயரமான மலைப் பகுதி ஆகிய இடங்களில் பயன்படுத்தி எதிரிகளின் இலக்கைத் தாக்கி அழிக்க முடியும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com