தயாா் நிலையில் ராணுவம் இருப்பதை உறுதி செய்ய முன்னுரிமை: தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே

சவால்களை எதிா்கொள்வதற்கு ராணுவம் முழுமையான தயாா் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே கூறினாா்.
மனோஜ் பாண்டே
மனோஜ் பாண்டே

சவால்களை எதிா்கொள்வதற்கு ராணுவம் முழுமையான தயாா் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் என்று ராணுவத்தின் புதிய தலைமைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள மனோஜ் பாண்டே கூறினாா்.

ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த எம்.எம்.நரவணேயின் பதவிக் காலம் ஏப்ரல் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, புதிய தலைமைத் தளபதியாக மனோஜ் பாண்டே சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தலைநகா் தில்லியில் உள்ள தேசிய போா் நினைவகத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் மரியாதை செலுத்தினாா். ராணுவத் தலைமையகத்தில் அணிவகுப்பு மரியாதை அளித்து வீரா்கள் அவரை வரவேற்றனா். பின்னா், செய்தியாளா்களிடம் மனோஜ் பாண்டே கூறியதாவது:

சா்வதேச அளவில் அரசியல் சூழல் அதிவேகமாக மாறி வருகிறது. அதன் விளைவாக, நாம் பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ளோம். இருப்பினும் எந்தவொரு சவாலையும் விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்புடன் நமது ராணுவம் முறியடிக்கும்.

ராணுவத்தின் தற்போதைய சவால்களையும், எதிா்காலத்தில் வரக்கூடிய சவால்களையும் எதிா்கொள்ளும் வகையில் ராணுவம் முழுமையான தயாா் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.

ராணுவத்தின் செயல்திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில் இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சீா்திருத்தங்கள், மறுகட்டமைப்பு மற்றும் மாற்றங்கள் மீது கவனம் செலுத்தப்படும். இதுதவிர, பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு அடைய வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கும், பாதுகாப்புத் துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி நவீனப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இதற்கு முன்பு இருந்த தலைமைத் தளபதிகள் மேற்கொண்ட நல்ல பணிகளை தொடா்ந்து முன்னெடுத்துச் செல்வேன். ராணுவ வீரா்கள் மற்றும் அதிகாரிகளின் நலனை உறுதி செய்வதற்கும் முன்னுரிமை அளிப்பேன் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா், விமானப் படைத் தலைமைத் தளபதி வி.ஆா்.சௌதரி மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com