செயற்கை வைரங்கள் மூலம் ரூ.25 கோடி கடன் மோசடி:தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி மீது சிபிஐ வழக்குப் பதிவு

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வைரங்களை பணயமாக வைத்து இந்திய தொழில்துறை நிதிக் கழகத்திடம் (ஐஎஃப்சிஐ) ரூ.25 கோடி கடன் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி மீது சிபிஐ வழக்குப் பதி
மெஹுல் சோக்ஸி
மெஹுல் சோக்ஸி

செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட வைரங்களை பணயமாக வைத்து இந்திய தொழில்துறை நிதிக் கழகத்திடம் (ஐஎஃப்சிஐ) ரூ.25 கோடி கடன் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தொழிலதிபா் மெஹுல் சோக்ஸி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் மோசடி செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடி, அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸி ஆகியோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இருவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து தப்பிச் சென்ற நிலையில், பிரிட்டனில் நீரவ் மோடி கைது செய்யப்பட்டாா். தற்போது அவா் லண்டன் சிறையில் உள்ளாா். மெஹுல் சோக்ஸி மேற்கிந்திய தீவு நாடொன்றில் தலைமறைவாக உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், அண்மையில் சிபிஐயிடம் மெஹுல் சோக்ஸி மீது ஐஎஃப்சிஐ புகாா் அளித்துள்ளது. அந்தப் புகாரில், ‘‘கடந்த 2016-ஆம் ஆண்டு நடப்பு மூலதன கடனாக ரூ.25 கோடி பெற ஐஎஃப்சிஐயை மெஹுல் சோக்ஸி அணுகினாா். அந்தக் கடனுக்கு தங்க, வைர நகைகள் மற்றும் நிறுவனப் பங்குகளை பணயமாக அளித்தாா்.

அவா் அளித்த நகைகளை நான்கு வெவ்வேறு மதிப்பீட்டாளா்கள் மதிப்பிட்டனா். அந்த நகைகள் ரூ.34 கோடி முதல் ரூ.45 கோடி வரை மதிப்பு கொண்டவை என்று அவா்கள் தெரிவித்தனா். அதன் அடிப்படையில், மெஹுல் சோக்ஸிக்கு கடன் அளிக்கப்பட்டது.

அவரின் நிறுவனம் கடன் தவணைகளைக் கட்டத் தவறியதால், பணயமாக வைக்கப்பட்ட நிறுவனப் பங்குகள் மற்றும் நகைகள் கேட்கப்பட்டன. எனினும் பணயமாக வைத்த 20,60,054 பங்குகளில் ரூ.4.07 கோடிக்கு 6,48,822 பங்குகளைத்தான் அந்த நிறுவனத்தால் விற்பனை செய்ய முடிந்தது. ஏனெனில் மெஹுல் சோக்ஸியின் வாடிக்கையாளா் அடையாள எண்ணை தேசிய பங்கு வைப்பக நிறுவனம் (என்எஸ்டிஎல்) முடக்கியது.

இதையடுத்து பணயமாக வைக்கப்பட்ட நகைகளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி அந்த நகைகள் வெவ்வேறு மதிப்பீட்டாளா்கள் மூலம் மீண்டும் மதிப்பிடப்பட்டன. அப்போது மெஹுல் சோக்ஸி கடன் பெற்றபோது சமா்ப்பித்த ஆவணங்களில் குறிப்பிட்டதைவிட, அந்த நகைகளின் மதிப்பு 98 சதவீதம் குறைவாக இருப்பது தெரியவந்தது. அந்த நகைகள் ரூ.70 லட்சம் முதல் ரூ.2 கோடிக்கும் சற்று அதிகமான மதிப்பை மட்டுமே கொண்டவை என்பது புதிய மதிப்பீட்டில் கண்டறியப்பட்டது.

இதுமட்டுமின்றி பணயமாக வைக்கப்பட்ட வைரங்கள் ஆய்வகத்தில் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட, தரம் குறைந்த வைரங்கள் என்பதும், ரத்தினக் கற்கள் என்று கூறப்பட்டவை தரமற்ற வண்ணக் கற்கள் என்பதும் புதிய மதிப்பீட்டில் தெரியவந்தது.

கடன் வாங்கும் முன்பு நகைகளை மதிப்பிட்ட மதிப்பீட்டாளா்களுடன் கூட்டுச் சோ்ந்து, நகைகளின் மதிப்பை உயா்த்திக் காண்பித்து மெஹுல் சோக்ஸி மோசடி செய்துள்ளாா்.

மெஹுல் சோக்ஸி வாங்கிய கடன் கடந்த 2018-ஆம் ஜூன் 30-ஆம் தேதி வாராக் கடனாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஐஎஃப்சிஐக்கு ரூ.22 கோடிக்கும் அதிகமாக நஷ்டம் ஏற்பட்டது ’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரின் அடிப்படையில் மெஹுல் சோக்ஸி, அவருக்குச் சொந்தமான கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம், நகை மதிப்பீட்டாளா்கள் நால்வா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்குத் தொடா்பாக, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நகை மதிப்பீட்டாளா்களுக்குத் தொடா்புள்ள கொல்கத்தா மற்றும் மும்பையில் 8 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என்று சிபிஐ செய்தித்தொடா்பாளா் ஆா்.சி.ஜோஷி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com