மீண்டும் பிரதமர் வேட்பாளர்? - ஓய்வென்ற பேச்சுக்‍கே இடமில்லை மோடி சூசகம்

2024 மக்களவைத் தேர்தலிலும் தானே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எனவும், எதிர்காலத்தில் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்துள்ளார். 
மீண்டும் பிரதமர் வேட்பாளர்? - ஓய்வென்ற பேச்சுக்‍கே இடமில்லை மோடி சூசகம்


புது தில்லி: 2024 மக்களவைத் தேர்தலிலும் தானே பாஜகவின் பிரதமர் வேட்பாளர் எனவும், எதிர்காலத்தில் ஓய்வென்ற பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் நரேந்திர மோடி சூசகமாக தெரிவித்துள்ளார். 

கைம்பெண்கள், மூத்தோா், ஆதரவற்றோா் ஆகியோருக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தை குஜராத் மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. அந்தத் திட்டங்களின் கீழ் தகுதியான அனைவருக்கும் நிதியுதவி வழங்கிய சாதனையை மாநிலத்தின் குஜராத்தின் பரூச் மாவட்டம் எட்டியது. அதைக் கொண்டாடுவதற்கான சிறப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட பிரதமா் மோடி கூறியதாவது:

"ஒரு நாள், எதிர்கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தன்னை சந்தித்தார், அவர் எங்களை அரசியல் ரீதியாக அடிக்கடி எதிர்ப்பவர், ஆனால் அவர் மீது எனக்கு மரியாதை உண்டு, அரசின் சில முடிவுகளில் அவர் மகிழ்ச்சி அடையவில்லை, அதனால் அவர் என்னை சந்திக்க வந்தார். அப்போது, நாட்டு மக்கள் உங்களை இரண்டு முறை பிரதமராக்கி விட்டார்கள், அதனால் என்ன? இதற்கு மேல் இன்னும் என்ன வேண்டுமா,  ஒருவர் இரண்டு முறை பிரதமரானால் அனைத்தையும் சாதித்து விட்டார் என குறிப்பிட்டதாக கூறினார். ஆனால், "நான் முற்றிலும் மாறுபட்ட படைப்பு என்பது அவருக்கு தெரியவில்லை". 

இந்த குஜராத் மண் தான் என்னை உருவாக்கியதாக கூறிய மோடி, அதனால்தான், நடந்தது நடந்துவிட்டது, இனி ஓய்வெடுக்காலம் என தாம் நினைக்கவில்லை என்றும், அதை எளிதாக எடுத்துக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 

மேலும், நலத்திட்டங்கள் 100 சதவிகிதமும் மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே எனது கனவு. அது நிறைவேறும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன். 
முன்பைவிட மேலும் உத்வேகத்துடன் பணியாற்றப்போவதாக அந்த எதிர்க்கட்சி தலைவரிடம் தான் கூறியதாக பிரதமர் மோடி கூறினார். 

எனினும், தனக்கு அறிவுரை வழங்கிய தலைவர் யார் என்பதை மோடி கூறவில்லை. 

இதன்மூலம் வரும் 2024 மக்களவைத் தேர்தலிலும் தானே பாஜக பிரதமர் வேட்பாளர் என்பதை பிரதமர் மோடி சூசகமாக தெரிவித்துள்ளார். 

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் மற்றும் மகாராஷ்டிரம் துணை முதல்வர் அஜித் பவாரின் குடும்ப உறுப்பினர்கள் வீடுகளில் அடுத்தடுத்து மத்திய அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. 

இதையடுத்து கடந்த மாதம் 6 ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், தில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது இருவரும் 20 நிமிடங்கள் பேசிக் கொண்டதாக தகவல் வெளியான ஒரு மாதத்திற்குப் பிறகு பிரதமர் மோடி இப்படியொரு தகவலை கூறியுள்ளார்.

முன்னதாக குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி, மத்தியில் பாஜக தலைமையிலான அரசு இந்த மாத இறுதியோடு 8 ஆண்டுகள் நிறைவடைவதையும் வகுறிப்பிட்டார்.

"நீங்கள் என்னை குஜராத்தில் இருந்து நாட்டுக்கு சேவை செய்ய தில்லிக்கு அனுப்பி எட்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகள் சேவை, நல்லாட்சி, ஏழைகள் நலன் ஆகியவற்றுக்காக அர்ப்பணிக்கப்பட்டதாக," என்று மோடி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com