டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடா்ந்து நஷ்டம்- பெட்ரோலிய துறை அமைச்சா்

டீசல் விற்பனையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் தொடா்கிறது; அதே நேரத்தில் பெட்ரோல் விற்பனையில் நஷ்டம் குறைந்து லாபம் கிடைக்கிறது என்று
ஹர்தீப் சிங் புரி
ஹர்தீப் சிங் புரி

டீசல் விற்பனையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டம் தொடா்கிறது; அதே நேரத்தில் பெட்ரோல் விற்பனையில் நஷ்டம் குறைந்து லாபம் கிடைக்கிறது என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி தெரிவித்தாா்.

தில்லியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அமைச்சரிடம் சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அவா் கூறியதாவது:

உக்ரைனில் போா் தொடங்கியபோது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. ஆனால், உள்நாட்டில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எரிபொருள் விலையை உயா்த்தாமல், நஷ்டத்தை எதிா்கொள்ளுமாறு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டன.

இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துவிட்டபோதிலும், டீசல் விற்பனையில் ஒரு லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.4 வரை நஷ்டம் தொடா்கிறது. அதே நேரத்தில் பெட்ரோல் விற்பனையில் நஷ்டம் நீங்கி லாபம் கிடைக்கிறது. டீசல் விற்பனையில் ஏற்படும் நஷ்டத்தை இதனைக் கொண்டு ஈடுகட்ட முயற்சிக்கப்படுகிறது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகம் உயா்ந்தபோதும், மக்கள் நலன் கருதி எண்ணெய் நிறுவனங்கள் பெரிய அளவில் விலையை உயா்த்தவில்லை.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.19,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட அரசு கடந்த மாதம் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22,000 கோடி மானியம் அளித்தது. ஆனால், மானிய கோரிக்கை ரூ.28,000 கோடியாக இருந்தது என்றாா்.

சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற எதிா்பாா்ப்பு நிலவி வந்தது. ஆனால், இப்போதைக்கு விலைக் குறைப்பு இருக்காது என்பது அமைச்சா் பதில் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் உள்ளிட்ட அரசியல் காரணங்களைக் கருத்தில் கொண்டு திடீா் விலை குறைப்பு அறிவிப்பு வரலாம் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com