
பந்தர்பூரில் உள்ள புகழ்பெற்ற விட்டல் கோயிலில் இரண்டு முக்கிய பூஜைகளை செய்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற உள்ளார் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ்.
மகாராஷ்டிரத்தில் முக்கிய புனிதத் தலங்களில் மாநில அரசின் சார்பில் வழக்கமான பூஜை நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில், பந்தர்பூரின் விட்டல் ருக்மனி கோயிலில் இரண்டு முக்கிய பூஜைகள் நடத்தப்படுகின்றன. ஒன்று ஆஷாதி ஏகாதசி மற்றொன்று கார்த்திகை ஏகாதசி.
துணை முதல்வராகப் பதவியேற்ற பிறகு, ஃபட்னாவிஸ் வெள்ளிக்கிழமை நடைபெறும் கார்த்திகை ஏகாதசி பூஜையில் பங்கேற்க உள்ளார்.
ஏகாதசி என்பது சந்திர நாள்காட்டியின் 11வது நாள். முழு நிலவுக்கு நான்கு நாள்களுக்கு முந்தைய நாள் வரும். இந்து நாள்காட்டியில் ஆஷாதி மாதம் பொதுவாக ஜூன், ஜூலையில் வரும். அதேவேளையில் கார்த்திகை மாதம் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வரும்.
1985ஆம் ஆண்டு முதல் மகாராஷ்டிர முதல்வர் விட்டல் ருக்மணி கோயிலில் ஆஷாதி ஏகாதசி பூஜை செய்யும் மரியாதை வழங்கப்பட்டது. அந்தவகையில் 2014 முதல் 2019 வரை முதல்வராக இருந்த ஃபட்னாவிஸ் ஆஷாதி ஏகாதசி பூஜையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
1995ஆம் ஆண்டு முதல், துணை முதல்வருக்கு கார்த்திகை ஏகாதசி பூஜை செய்யும் மரியாதை வழங்கப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் கூறினார். அதன் அடிப்படையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இந்த ஆண்டு ஜூன் மாதம் துணை முதல்வராகப் பதவியேற்றுள்ளார் ஃபட்னாவிஸ். எனவே, இந்தாண்டு நடைபெறும் கார்த்திகை ஏகாதசி சிறப்புப் பூஜையில் அவர் பங்கேற்க உள்ளார்.
இரண்டு பதவிகளையும் இதுவரை எவரும் வகித்ததில்லை, எனவே இரண்டு பூஜைகளையும் செய்யும் சிறப்பையும் எந்த அரசியல்வாதியும் பெற்றதில்லை. முதல் முறையாக இரண்டு பூஜைகளையும் செய்யும் வாய்ப்பையும், பெருமையையும் பெறும் முதல் அரசியல்வாதி ஃபட்னாவிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.