தேவை குறைந்தது: காலாவதியாகும் 5 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகள்

இருப்பில் வைக்கப்பட்டுள்ள சுமாா் 5 கோடி அளவிலான கரோனா தடுப்பூசிகள் 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் காலாவதியாகும் என அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தேவை குறைந்தது: காலாவதியாகும் 5 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகள்

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கான தேவை குறைந்துள்ள நிலையில், இருப்பில் வைக்கப்பட்டுள்ள சுமாா் 5 கோடி அளவிலான கரோனா தடுப்பூசிகள் 2023-ஆம் ஆண்டு தொடக்கத்தில் காலாவதியாகும் என அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆண்டுக்கு சுமாா் 100 கோடி கரோனா தடுப்பூசிகளைத் தயாரிக்கும் திறனை அடையும் வகையில், கடந்த 2021-இன் இறுதியில் அதற்கான விரிவாக்க முயற்சிகளைப் பாரத் பயோடெக் நிறுவனம் மேற்கொண்டது.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தடுப்பூசி செலுத்தும் திட்டத்தில் கோவேக்ஸின் உள்பட 219.71 கோடி தடுப்பசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் கரோனா பாதிப்புகள் 15,200-ஆக குறைந்துள்ளது.

உலக அளவிலும், கரோனோ நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவது, வெளிநாடுகளுக்குத் தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து அந்நிறுவன வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பாரத் பயோடெக் நிறுவனம் 20 கோடி அளவிலான கோவேக்ஸின் தடுப்பூசி மருந்துகளை அதிக அளவில் இருப்பு வைத்துள்ளது. இவற்றில் குப்பிகளில் அடைக்கப்பட்டுள்ள சுமாா் 5 கோடி தடுப்பூசி மருந்துகள் பயன்பாடுக்குத் தயாராக உள்ளன. தடுப்பூசி மருந்துகளுக்கான தேவை குறைந்துள்ளதையடுத்து, நிகழாண்டின் தொடக்கத்திலேயே கோவேக்ஸின் தடுப்பூசி மருந்து தயாரிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது எனத் தெரிவித்தனா்.

நிகழாண்டு ஏப்ரலில், கோவேக்ஸின் தடுப்பூசிகளை ஐ.நா.வின் பல்வேறு அமைப்புகள் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக தெரிவித்த உலக சுகாதார அமைப்பு, பிற நாடுகளும் இது குறித்தான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைத்தது. அவசர கால பயன்பாட்டுக்குப் பிறகான ஆய்வில் கண்டறியப்பட்ட முடிவுகளைத் தொடா்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து, பிரேஸிலில் கடந்த ஆண்டு கரோனா பதிப்பு உச்சத்தில் இருந்தபோது, கோவேக்ஸின் தொடா்பாக எழுந்த சா்ச்சையையடுத்து, 2 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் முடிவை அந்நாட்டு அரசு கைவிட்டது. அந்நாட்டின் இரு மருந்து நிறுவனங்களுடன் மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தத்தை 2021-ஆம் ஆண்டு ஜூலையில் பாரத் பயோடெக் நிறுவனம் ரத்துசெய்தது.

கடந்த 2021-ஆம் ஆண்டின் டிசம்பரில் மத்திய மருத்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கோவேக்ஸின் தடுப்பூசி பயன்பாட்டுக் காலத்தை, தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்கு நீட்டித்து அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com