நாட்டின் உள் பாதுகாப்பு நிலைமை, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் குறித்து உளவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்க மத்திய புலனாய்வு அமைப்பு(IB - Intelligence Bureau) செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் உள்ள உளவுத்துறை(ஐபி) அதிகாரிகளின் உயர்நிலைக்குழுக் கூட்டம் அமைச்சர் அமித் ஷா தலைமையில் இன்று காலை 11 மணி முதல் 5 மணி வரை நடைபெறுகிறது. தில்லியில் ரகசிய இடத்தில் இந்த கூட்டமானது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புச் சூழல் மட்டுமின்றி பயங்கரவாதம், உலகளாவிய பயங்கரவாத குழுக்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள், பயங்கரவாதத்துக்கு ஆதரவாக நிதியளித்தல், போதைப்பொருள் பயங்கரவாதம் போன்ற விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மத்திய - மாநில பாதுகாப்பு முகமைகளுக்கு இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்பதால் அதுகுறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, உளவுத்துறை(ஐபி) இயக்குநர் தபன் டேகா மற்றும் நாடு முழுவதும் உள்ள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.