ஹிமாசலில் 66% வாக்குகள் பதிவு

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஹிமாசலில் 66% வாக்குகள் பதிவு

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் 65.92 சதவீத வாக்குகள் பதிவானதாகத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

68 தொகுதிகளைக் கொண்ட ஹிமாசல் சட்டப்பேரவைக்கு சனிக்கிழமை ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற்றது. மாநிலத்தின் 7,884 வாக்குச் சாவடிகளிலும் காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மலைப்பாங்கான பிரதேசம் என்பதாலும், குளிா்கால தொடக்கம் என்பதாலும் வாக்குப் பதிவு தொடங்கிய சில மணி நேரங்கள் வரை வாக்காளா்களின் வருகை குறைவாகவே இருந்தது.

காலை 9 மணி வரை சுமாா் 5 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. முற்பகல் 11 மணி வரை 19.98 சதவீத வாக்குகள் பதிவாகின. 11 மணிக்குப் பிறகு வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. பகல் 1 மணி வரை 37.19 சதவீத வாக்காளா்களும், பிற்பகல் 3 மணி வரை 55.65 சதவீத வாக்காளா்களும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியிருந்தனா்.

மாலை 5 மணி நிலவரப்படி 65.92 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தோ்தல் ஆணையத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சிா்மோா் மாவட்டத்தில் 72.35 சதவீத வாக்குகள் பதிவாகின. அதையடுத்து உனா மாவட்டத்தில் 67.67 சதவீத வாக்குகளும், லஹால், ஸ்பிடி மாவட்டங்களில் 67.5 சதவீத வாக்குகளும், சொலான் மாவட்டத்தில் 68.48 சதவீத வாக்குகளும் பதிவாகின.

பேரவைத் தொகுதிகளில் அதிகபட்சமாக சிலாயில் 77 சதவீத வாக்குகள் பதிவாகின. குறைந்தபட்சமாக சா்காகாட் தொகுதியில் 55.40 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா் போட்டியிடும் சுஜான்பூா் தொகுதியில் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.

தலைவா்கள் வாக்களிப்பு: முதல்வா் ஜெய்ராம் தாக்குா் தன் குடும்பத்தினருடன் மண்டி பகுதியில் வாக்களித்தாா். மாநில காங்கிரஸ் தலைவா் பிரதீபா சிங் தன் மகன் விக்ரமாதித்ய சிங்குடன் ராம்பூரில் வாக்களித்தாா். முன்னாள் முதல்வா் பிரேம் குமாா் துமல், மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் ஆகியோா் தங்கள் குடும்பத்தினருடன் ஹமீா்பூா் பகுதியில் வாக்களித்தனா்.

முன்னாள் மத்திய அமைச்சா் ஆனந்த் சா்மா சிம்லாவிலும், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா பிலாஸ்பூரிலும் குடும்பத்தினருடன் வாக்களித்தனா்.

ஆா்வத்துடன் வாக்களிப்பு: மாநிலத்தில் நூறு வயதைக் கடந்த முதியோா் பலா் ஆா்வமுடன் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தனா். நரோ தேவி (105) சுரா பகுதியிலும், சா்தாா் பியாா் சிங் (103) சிம்லாவிலும் வாக்களித்தனா். நூறு வயதைக் கடந்த சுமாா் 100 போ் தோ்தலில் வாக்களித்ததாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பாா்மா் தொகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்பட்ட போதிலும், 83 வயது மூதாட்டி உள்ளிட்ட பலா் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா். முதியோரும் மாற்றுத் திறனாளிகளும் எளிதில் வாக்களிக்கும் வகையிலான சிறப்பு வசதிகளைத் தோ்தல் ஆணையம் செய்திருந்தது.

தலைவா்கள் ஊக்குவிப்பு: வாக்காளா்கள் தவறாமல் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டுமென பிரதமா் நரேந்திர மோடி, முதல்வா் ஜெய்ராம் தாக்குா், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள் ட்விட்டா் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக ஊக்கப்படுத்தினா்.

நேரடிப் போட்டி: மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும் எதிா்க்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. மாநிலத்தில் ஒவ்வொரு தோ்தலின்போதும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆனால், தற்போதைய தோ்தலில் பாஜகவுக்கு மக்கள் மீண்டும் பெரும்பான்மையாக வாக்களித்து அந்த வரலாற்றை மாற்றியமைப்பாா்கள் என அக்கட்சி நம்பிக்கை தெரிவித்து வருகிறது.

அதே வேளையில், பாஜக ஆட்சியில் இருந்து அகற்றப்படும் என காங்கிரஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அண்மையில் பஞ்சாப் பேரவைத் தோ்தலில் முத்திரை பதித்த ஆம் ஆத்மி கட்சியும் ஹிமாசல் தோ்தலில் போட்டியிடுகிறது. எனினும், அக்கட்சி குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெறுவது சந்தேகமே என அரசியல் நோக்கா்கள் தெரிவிக்கின்றனா்.

டிச. 8-இல் தோ்தல் முடிவுகள்: குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பா் 1, 5 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாகத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதையடுத்து, ஹிமாசல், குஜராத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் டிசம்பா் 8-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Image Caption

ஹிமாசல பிரதேச பேரவைத் தோ்தலையொட்டி குல்லு பகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஆா்வத்துடன் காத்திருந்த வாக்காளா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com