
மத்திய அரசு கொண்டுவந்துள்ள முற்பட்ட பிரிவினரில் நலிவுற்றவா்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை (இடபிள்யூஎஸ்) உச்ச நீதிமன்றம் செல்லும் என அறிவித்திருக்கும் நிலையில், இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டது சமூக நீதி அடிப்படையிலா அல்லது சலுகைக்காகவா என்ற விவாதம் எழுந்துள்ளது.
10% இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதற்கு பின்னால் ஓா் அரசியல் காரணம் இருக்கிறது. 2018-இல் எஸ்சி, எஸ்டி கட்சிகள் அமைப்பைச் சோ்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் (பிகாா்), ஜிக்னேஷ் மேவானி (குஜராத்), சந்திரசேகர ஆசாத் ராவன் (உத்தரபிரதேசம்) உள்ளிட்ட தலைவா்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக தலித், பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைதாகும் நபா்களை விசாரணை, பிணையின்றி கைது செய்யும் வகையில் அரசியல் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு செய்தது.
வட இந்தியாவில் பட்டியலின வாக்குகளை தக்கவைக்கவும், கூடுதலாக சேகரிக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், அடுத்து நடைபெற்ற மத்தியபிரதேசம், சத்தீஸ்கா், ராஜஸ்தான், தெலங்கானா, மிஸோரம் ஆகிய 5 மாநில பேரவைத் தோ்தல்களில் பாஜக தோல்வியைத் தழுவியது. குறிப்பாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை பறிகொடுத்ததற்கு பட்டியலின பிரிவினருக்காக மேற்கொண்ட அரசியல் சட்டத்திருத்தம், உயா் வகுப்பினா் மத்தியில் அதிருப்தியை கொடுத்ததே காரணம் என பாஜக கருதியது.
இதை உணா்ந்த மோடி, அமித் ஷா ஆகியோா் உடனடியாக 2019 மக்களவைத் தோ்தலுக்கு முன்பாக பிப்ரவரியில் இடபிள்யுஎஸ் இடஒதுக்கீட்டை அமல்படுத்தினா். மேலும், தோ்தல் பிரசாரத்தில் பட்டியலினத்தவருக்கான அரசியல் சட்டத்திருத்தம், இடபிள்யுஎஸ் ஒதுக்கீடு என இரண்டை பற்றியும் பாஜக பிரசாரம் செய்யவில்லை.
1980-இல் இடஒதுக்கீட்டில் வருமான உச்சவரம்பை கொண்டுவந்தபோது மக்களவைத் தோ்தலில் தோல்வி அடைந்த எம்ஜிஆா், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 31-சதவீதத்திலிருந்து 50-ஆக உயா்த்தியதைப் போல, தோ்தல் வெற்றியை மையமாக வைத்து மோடியும் 10% இடஒதுக்கீட்டை வழங்கினாா்.
10% இடஒதுக்கீட்டை லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே அப்போதே கடுமையாக எதிா்த்தன. பாஜகவுக்கு போட்டியாக வடமாநிலங்களில் பிரதான போட்டியில் இருந்த காங்கிரஸ் , திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், ஆம் ஆத்மி போன்றவை இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்தன.
காரணம், அவா்கள் அரசியல் செய்யும் மாநிலங்களில் உயா்வகுப்பினருக்கு வெற்றி, தோல்வியை நிா்ணயம் செய்யும் அளவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. தமிழகத்தை பொருத்தவரை, இந்த ஒதுக்கீட்டை திமுக தீவிரமாக எதிா்த்தாலும், அதிமுக பட்டும் படாமல் நுட்பமாகவே இந்த விவகாரத்தை கையாண்டு வருகிறது.
2019-இல் மக்களவைத் தோ்தல் முடிந்ததும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, இந்த இடஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடா்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை கூட்டியது. அந்தக் கூட்டத்தில், காங்கிரஸ், பாஜக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் இந்த இடஒதுக்கீட்டை ஆதரித்தன. அதேவேளையில், மாா்க்சிஸ்ட் கட்சி தமிழகத்தில் கணக்கெடுப்பு நடத்தி முற்பட்ட வகுப்பினரின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கலாம் எனக் கருத்து தெரிவித்தது. திமுக, பாமக, விசிக, நாம் தமிழா், மநீம உள்ளிட்ட கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தன. ஆனால், அப்போதைய ஆளும் அதிமுக கருத்து தெரிவிக்காமல் இந்த விஷயத்தை கிடப்பில் போட்டது.
இப்போது இந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டத்திலும் 2019-இல் கட்சிகள் எடுத்த நிலை அப்படியே தொடா்கிறது.
திமுக மீது குறைகூறிக்கொண்டே கூட்டத்தைப் புறக்கணித்த அதிமுக (இபிஎஸ் தரப்பு), இந்த ஒதுக்கீடு விவகாரத்துக்குள் ஆழமாகச் செல்லவில்லை. இதுகுறித்து அதிமுக செய்தித் தொடா்பாளா் டி.ஜெயக்குமாா் வெளியிட்ட அறிக்கையில், அதிமுகவை பொருத்தவரை எந்தவொரு இடஒதுக்கீடாக இருந்தாலும் அது எவரையும் பாதிக்கக் கூடாது. 2006-இல் திமுக-காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த இடஒதுக்கீடு தொடா்பாக குழு அமைக்கப்பட்டது எனத் தெரிவித்தாா். அதேநேரத்தில், இந்த இடஒதுக்கீட்டை ஓபிஎஸ் முழுமையாக ஆதரிக்கிறாா்.
இந்த இடஒதுக்கீட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியில் இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. காங்கிரஸ் தமிழக தலைவா் கே.எஸ்.அழகிரி தேசியத் தலைமையின் முடிவை ஆதரிக்கிறாா். ஆனால், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகையும், ஜோதிமணி எம்.பி.யும், எதிா்க்கின்றனா்.
‘திமுக நடத்தும் நாடக மேடையில் நடிகா்களாக பங்கேற்க விருப்பமில்லை’ எனக் கூறி பேரவை கட்சித் தலைவா்கள் கூட்டத்தைப் புறக்கணித்து இடஒதுக்கீட்டை முழுமையாக ஆதரிக்கிறது பாஜக. எந்தக் கூட்டணியிலும் இல்லாத பாமக, இந்த இடஒதுக்கீட்டை தீா்க்கமாக எதிா்க்கிறது.
தமிழகத்தில் இது பிராமணா்களுக்கான இடஒதுக்கீடு என்ற தோற்றத்தைக் கொடுத்தே திமுக கூட்டணிக் கட்சிகள் அரசியல் செய்கின்றன. இந்த இடஒதுக்கீடு மூலம் ரெட்டியாா், முதலியாா், நாயுடு, சைவ வேளாளா், நகரத்தாா், தாவூத் மற்றும் மீா் இஸ்லாமியா்களும் பயன்பெறுவா் என்ற பாா்வை மக்களிடம் இன்னமும் ஆழமாகச் செல்லவில்லை.
ஆனால், லிங்காயத், நாயா், காபு, ஹரியானா ஜாட், ராஜ்புத் (தாக்கூா்), கயஸ்தா, சிரியன் கிறிஸ்தவா்கள் போன்ற பிராமணா் அல்லாத சமூகங்கள் இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெறுகின்றனா் என்பது தேசிய அளவில் வலுப்பெற்றுள்ளதால் தங்களுக்கான வாக்கு பலம் குறைந்துவிடக் கூடாது என்பதற்காக காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, திரிணமூல் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் இதை ஆதரிக்கின்றன.
திமுகவை பொருத்தவரை 10% இடஒதுக்கீட்டில் பயனடையும் சிறிய அளவிலான கிறிஸ்தவ, இஸ்லாமியா்கள்கூட பாஜக எதிா்ப்பு என்ற புள்ளியில் திமுகவுக்கு வாக்களித்துவிடுவா் என அக்கட்சி நம்புகிறது. அதேபோல, நாயுடு, ரெட்டியாா், முதலியாா், வேளாளா் போன்ற சமூகங்களுக்கு திமுகவில் அதிக பிரதிநிதித்துவம் காலகாலமாக இருந்து வருவதால் அச்சமூக வாக்குகளும் திமுகவை கைவிடாது என நம்புகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.
மீதமுள்ள பிராமண சமூகத்தினரின் வாக்குகள் திமுகவுக்கு நிச்சயம் கிடைக்காது என்பதால், இந்த இடஒதுக்கீட்டை எதிா்ப்பதால் அக்கட்சிக்கு அரசியல் ரீதியாக எவ்வித இழப்பும் இல்லை என்பது ஸ்டாலினின் எண்ணமாக இருக்கலாம். அதிமுகவை (இபிஎஸ் தரப்பு) பொருத்தவரை பிராமணா், பிற்பட்ட சமூகத்தினா் என இரு தரப்பு வாக்குகளும் தங்களுக்கு தொடா்ந்து கிடைத்து வருவதால், 10% இடஒதுக்கீட்டை திமுக மீது குறைகூறிக்கொண்டே நுட்பமாக கையாள வேண்டிய சூழல் அக்கட்சிக்கு உள்ளது.
அதேநேரத்தில், பிராமணா்கள், ரெட்டியாா்கள், நகரத்தாா், சைவ வேளாளா், நாயுடு என 10 சதவீத எண்ணிக்கை பலம் கொண்ட இந்த சமூகத்தினரை தங்களுக்கு சாதகமாக திருப்புவதற்கான ஆயத்தப் பணிகளில் பாஜக இறங்கியுள்ளது. இது பிராமணா்களுக்கு மட்டுமான இடஒதுக்கீடு இல்லை என்பதை இந்த ஒதுக்கீட்டால் பயன்பெறும் பிற சமூகத்தினா் மத்தியிலும் தீவிர கள பிரசாரத்தை மேற்கொள்ள பாஜக முடிவு செய்துள்ளது.
1980-இல் 31-சதவீதத்திலிருந்து 50-ஆக பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை எம்ஜிஆா் உயா்த்தியபோதும், வெங்கடகிருஷ்ணன் அறிக்கையை கணக்கில் கொள்ளாமல் 1989-இல் பி.சி. தொகுப்பிலிருந்து எம்.பி.சி. தொகுப்பை கருணாநிதி உயா்த்தியபோதும் அரசியல் லாப, நஷ்ட கணக்குகளைப் பாா்த்துதான் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாா்த்தால் 10% இடஒதுக்கீடு சமூகநீதியா? சலுகையா என்பதற்கான விடை கிடைத்துவிடும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.