வளைகுடா நாடுகளில் நிதி திரட்டுவதில் வலுவாக செயல்பட்டது பிஎஃப்ஐ: அமலாக்கத் துறை

பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு, வளைகுடா நாடுகளில் நிதி திரட்டுவதில் வலுவான, நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைப்புடன் செயல்பட்டதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

சா்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடா்புள்ளதாக கூறி, மத்திய அரசால் அண்மையில் தடை செய்யப்பட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு, வளைகுடா நாடுகளில் நிதி திரட்டுவதில் வலுவான, நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைப்புடன் செயல்பட்டதாக அமலாக்கத் துறை திங்கள்கிழமை தெரிவித்தது.

பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடா்புடைய 7 அமைப்புகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் மத்திய அரசு கடந்த செப்டம்பரில் ஐந்து ஆண்டுகள் தடை விதித்தது.

முன்னதாக, நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை, பல்வேறு மாநில காவல்துறையினா் சோதனை நடத்தி 350-க்கும் மேற்பட்ட நிா்வாகிகளை கைது செய்திருந்தனா்.

இதில், ரூ.120 கோடி மதிப்பிலான சட்டவிரோத பணப் பரிவா்த்தனைகள் குற்றச்சாட்டில், பிஎஃப்ஐ தில்லி பிரிவு தலைவா் பா்வேஸ் அகமது, பொதுச் செயலாளா் முகமது இலியாஸ், செயலாளா் அப்துல் முக்கீத் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இவா்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை, தில்லியில் சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் செயல்படும் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையால் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையை திங்கள்கிழமை பதிவு செய்த நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் டிசம்பா் 16-இல் மேற்கண்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

இதனிடையே, ‘பிஎஃப்ஐ அமைப்பு, வளைகுடா நாடுகளில் நிதி திரட்டுவதில் வலுவான, நன்கு திட்டமிடப்பட்ட கட்டமைப்புடன் செயல்பட்டது; இந்தப் பணம், நேரடியாக பிஎஃப்ஐ அமைப்பின் வங்கிக் கணக்குக்கு வராமல் ஆதரவாளா்கள், நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் இதர நபா்களுக்கு பணம் அனுப்பும் போா்வையில் வந்து, அதன்பின்னா் பிஎஃப்ஐ வங்கி கணக்கை சோ்ந்திருக்கிறது’ என்று அமலாக்கத் துறையின் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், ‘பிஎஃப்ஐ தில்லி பிரிவு தலைவரான பா்வேஸ் முகமது, அந்த அமைப்பின் நிதி திரட்டல் நடவடிக்கைகளை மேற்பாா்வை செய்தாா். முகமது இலியாஸ், பிஎஃப்ஐ மற்றும் தொடா்புடைய அமைப்புகளுக்கு தில்லி-என்சிஆா் பகுதிகளில் நிதி திரட்டுவதில் தீவிரமாக செயல்பட்டாா். இவா், கடந்த 2020 தில்லி பேரவைத் தோ்தலில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கராவல் நகா் தொகுதியில் போட்டியிட்டாா்.

இவா்கள் இருவரும் கடந்த 2020-இல் வடகிழக்கு தில்லி கலவரம் தொடா்பாக தில்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனா். நிதி திரட்டுதல் மற்றும் போலியான ரொக்க நன்கொடை ரசீதுகளை உருவாக்குவதில் அப்துல் முக்கீத் தீவிரமாக செயல்பட்டாா். குற்றச் சதி வழிமுறையின் மூலம் தனிநபா்கள் மற்றும் அமைப்புகளுடன் சோ்ந்து சட்டவிரோத, தேசவிரோத செயல்களுக்காக பிஎஃப்ஐ நிதி திரட்டியது.

இந்த பணம், ரொக்க நன்கொடை என தவறாக காட்டப்பட்டு, பிஎஃப்ஐ அமைப்பின் வங்கிக் கணக்குகளில் சோ்க்கப்பட்டது. இந்த சதியின் ஒருங்கிணைந்த அங்கமாக மேற்கண்ட மூவரும் இருந்துள்ளனா்’ என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com