சாம்பல்குறை நிலக்கரிக்கான மாற்று: விரிவான ஆய்வு அவசியம்

எஃகு உற்பத்தியில் பயன்படும் சாம்பல் அளவு குறைவாக உள்ள நிலக்கரியின் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் அதற்கான மாற்று எரிபொருளை உருவாக்க விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என
பியூஷ் கோயல்
பியூஷ் கோயல்
Published on
Updated on
1 min read

எஃகு உற்பத்தியில் பயன்படும் சாம்பல் அளவு குறைவாக உள்ள நிலக்கரியின் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில் அதற்கான மாற்று எரிபொருளை உருவாக்க விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளாா்.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியில் சாம்பல் அளவு அதிகமாக இருப்பதால், அதை எஃகு உற்பத்தியில் பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. அதனால், சாம்பல் அளவு குறைவாக உள்ள நிலக்கரியானது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இது எஃகு உற்பத்தி நிறுவனங்களுக்கான செலவை அதிகரிக்கிறது.

இந்நிலையில், எஃகு உற்பத்தி நிறுவனங்களின் மாநாடு தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘எஃகு துறையின் பெரும் சவாலாக சாம்பல்குறை நிலக்கரி பிரச்னை நிலவுகிறது. அதற்கான மாற்று எரிபொருளைக் கண்டறிவதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது. அதை உருவாக்குவதற்கு ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து எஃகு உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட வேண்டும்.

சாம்பல்குறை நிலக்கரிக்கான மாற்று எரிபொருளைக் கண்டறியும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. எஃகு உற்பத்தியில் முற்றிலும் தன்னிறைவு பெற வேண்டிய காலகட்டம் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுடன் கையொப்பமாகியுள்ள வா்த்தக ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, அந்நாட்டுக்கு எஃகு ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

உள்நாட்டு எஃகு உற்பத்தியாளா்களுக்கான சா்வதேச சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது’’ என்றாா்.

கூடுதல் நாடுகளிடமிருந்து...: மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சாம்பல்குறை நிலக்கரியை மேலும் சில நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதே வேளையில், நிலக்கரி வாயுவாக்கல் செயல்முறை மூலமாக மாற்று எரிபொருளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு 10 கோடி டன் நிலக்கரி வாயுவை உருவாக்குவதற்கான ஆலையை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com