இப்படியும் ஒரு மோசடியா? அமலாக்கத் துறை பெயரில் போலி சம்மன்; 10 பேர் கைது

அமலாக்கத் துறை பெயரில், பொது மக்களுக்கு முறைகேடாக பணம் சம்பாதித்ததாகக் கூறி சம்மன் அல்லது நோட்டீஸ் அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இப்படியும் ஒரு மோசடியா? அமலாக்கத் துறை பெயரில் போலி சம்மன்; 10 பேர் கைது



புது தில்லி: அமலாக்கத் துறை பெயரில், பொது மக்களுக்கு முறைகேடாக பணம் சம்பாதித்ததாகக் கூறி சம்மன் அல்லது நோட்டீஸ் அனுப்பி மோசடியில் ஈடுபட முயன்ற கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுபோன்ற போலியான சம்மன்கள் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியிருக்கும் அமலாக்கத் துறை, பொய்யான சம்மன் அல்லது நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு வரும் நபர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் திட்டத்தை ஒரு கும்பல் முயன்றதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்எல்ஏ மற்றும் எஃப்இஎம்ஏ-ன் கீழ் அறிக்கைகளை பதிவு செய்வதற்கான சம்மன்களை வழங்குவதற்காக, போலியாக தயாரிக்க முடியாத பொறிமுறையை அமலாக்கத் துறை உருவாக்கியுள்ளது என்றும், தகுதிவாய்ந்த அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட சம்மன்கள் மின்னணு முறையில் உருவாக்கப்படுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ள ஒரு தனித்துவமான க்யூஆர் குறியீட்டினை கொண்டிருக்கும் என்றும் அமலாக்கத் துறை தெளிவுபடுத்தியிருக்கிறது.

பல மாநிலங்களைச் சேர்ந்த நபர்கள் கும்பலாக இணைந்து, இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு மாநிலங்களிலும் மிகப் பிரபலமானவர்கள், தொழிலதிபர்களுக்கு அமலாக்கத் துறை பெயரில் போலியாக சம்மன் அனுப்பி, அவர்களிடம் விசாரணை என்ற பெயரில் மிரட்டி பணம் பறிக்க இந்த கும்பல் முயன்றதாகக் கூறப்படுகிறது.

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்ததாகக் கூறி, மும்பையை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பெயிண்ட் கம்பெனிக்கு, சம்மன் அனுப்பியிருக்கிறார்கள். பிறகு, அமலாக்கத் துறையிலிருந்து பேசுவதாக ஒரு சிலர் பேசி, இங்கிருக்கும் சில அதிகாரிகளை சரிகட்ட ரூ.15 - 20 கோடி கொடுக்க வேண்டும் என்று மிரட்டியிருக்கிறார்கள்.

இவர்கள் அமலாக்கத் துறைக்கு இந்த தகவல் குறித்து பேசும்போது, இது போலியானது என்பது தெரிய வந்து, பிறகு இந்த கும்பலைப் பிடிக்க அவர்களை தில்லி வரவழைத்தனர். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வந்து பணம் தருவதாகக் கூறிவிட்டு, பிறகு காவல்துறையினர் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து நடத்திய விசாரணையில், இந்த கும்பலைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் அமலாக்கத் துறையிடமிருந்து  அல்லது வேறு எந்த துறையிடமிருந்தும் சம்மன் அனுப்பப்பட்டாலும் தவறான வழிகளில் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும், யார் மிரட்டினாலும் உடனடியாக புகார் அளிக்குமாறும் அமலாக்கத் துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com