வேந்தர் பதவியைப் பறிக்கும் அவசர சட்டம் பயனற்றதாகிவிட்டது: கேரள ஆளுநர்

கேரள சட்டப்பேரவை கூட இருப்பதால், பல்கலைக்கழக வேந்தர் பதவியை ஆளுநரிடமிருந்து பறிக்கும் வகையில் கேரள அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் பயனற்றதாகிவிடுகிறது என்று
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

கேரள சட்டப்பேரவை கூட இருப்பதால், பல்கலைக்கழக வேந்தர் பதவியை ஆளுநரிடமிருந்து பறிக்கும் வகையில் கேரள அரசு கொண்டுவந்த அவசரச் சட்டம் பயனற்றதாகிவிடுகிறது என்று கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புதன்கிழமை தெரிவித்தார்.
 கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியை ஆளுநரிடம் இருந்து பறிக்கும் வகையில் இம்மாதத் தொடக்கத்தில் அவசரச் சட்டம் ஆளும் இடதுசாரி அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தை டிசம்பர் 5 ஆம் தேதி கூடவுள்ள பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது.
 இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களுக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
 கேரள சட்டப்பேரவை கூட்டப்பட்டதும், ஆளுநர் மாளிகைக்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட எந்த அவசரச் சட்டமும் பயனற்றகாகிவிடும். அந்த வகையில் ஆளுநர் மாளிகையில் தற்போது எந்த அவசரச் சட்ட மசோதாவும் நிலுவையில் இல்லை. அண்மையில் ஆளுநர் மாளிகை முன்பு அரசுப் பணியாளர்கள் போராட்டம் நடத்தியது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் நான் எந்த விளக்கமும் கேட்கவில்லை. மாநிலத்தில் சட்டத்தை மீறும் செயல் சாதாரணமாகி விட்டதாகவே தெரிகிறது.
 பல்கலைக்கழக வழக்குகளில் ஒன்றன்பின் ஒன்றாக கடந்த 6 மாதங்களில் நீதிமன்றம் தீர்ப்புகளை அளித்து வருகிறது. 3 அல்லது 4 தீர்ப்புகள் நீதிமன்றத்தால் அளிக்கப்பட்டுள்ளன. அவை மாநிலத்தில் சட்ட மீறல்கள் இருப்பதை அம்பலப்படுத்தியுள்ளன. நிலைமையை சீரமைக்க போதிய கால அவகாசம் அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சட்டத்துக்கு அவமதிப்பு நிகழும் பட்சத்தில் சில சமயங்களில் ஆளுநர் செயல்பட வேண்டிவரும்.
 ஆளுநர் மாளிகைக்கு கூடுதல் விருந்தாளிகள் வந்தால் அரசிடம் இருந்து கூடுதல் வாகனங்கள் கோருவது சாதாரணமானது தான். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆளுநர் மாளிகைக்கு வரும் விருந்தாளிகளை நான் நடந்து செல்லுங்கள் என்று கூற முடியாது என்றார்.
 கேரள பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர்களை நியமிப்பது உள்பட பல்வேறு விஷயங்களில் ஆளும் இடதுசாரி கூட்டணி அரசுக்கும் ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com