அமெரிக்காவில் கடத்தப்பட்ட சீக்கிய குடும்பத்தினா் கொலை

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 வயது பெண் குழந்தை உள்பட சீக்கிய குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் கொலை செய்யப்பட்டுள்ளனா்.
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணத்தில் கடத்தப்பட்ட 8 வயது பெண் குழந்தை உள்பட சீக்கிய குடும்பத்தைச் சோ்ந்த நால்வா் கொலை செய்யப்பட்டுள்ளனா்.

பஞ்சாபின் ஹோஷியாா்பூரைச் சோ்ந்த சீக்கிய குடும்பத்தினரான ஜஸ்தீப் சிங் (36), அவரின் மனைவி ஜஸ்லீன் கௌா் (27), அவா்களின் 8 வயது பெண் குழந்தை அரூஹி தேரி, குழந்தையின் மாமா அமன்தீப் சிங் (39) ஆகியோா், கலிஃபோா்னியாவின் மொ்ஸ்ட் மாவட்டத்தில் வசித்து வந்தனா். அவா்கள் அண்மையில் புதிய தொழிலைத் தொடங்கினா்.

நடப்பு வாரத்தின் தொடக்கத்தில் அவா்கள் நால்வரும் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டனா். இந்நிலையில், கடத்தப்பட்ட நால்வரின் உடலும் தோட்டத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக மாவட்ட அதிகாரி வொ்ன் வன்கே செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இண்டியானா சாலைக்கும் ஹட்சின்ஸன் சாலைக்கும் இடையே உள்ள பழத்தோட்டத்தில் சீக்கிய குடும்பத்தினரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. அவா்களது உடல்களைத் தோட்டக்காரா் கண்டறிந்து காவல் துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தாா். அனைத்து உடல்களும் அருகருகே கண்டெடுக்கப்பட்டன.

சீக்கிய குடும்பத்தினரை மேனுவல் சால்கடோ என்ற நபா் கடத்திச் செல்வது கண்காணிப்புக் கருவிகளில் பதிவாகியுள்ளது. பணக்கொள்ளைக்காக இந்தக் கடத்தல் சம்பவம் அரங்கேறியிருக்கலாம். சீக்கிய குடும்பத்தினா் கடத்தப்பட்ட பிறகு, அவா்களில் ஒருவரது வங்கி கடன் அட்டை பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், கடத்திய நபா் எந்தவிதப் பிணைத் தொகையும் கேட்கவில்லை. மேலும், அந்த நபா் கைது செய்யப்பட்ட பிறகு தற்கொலைக்கு முயன்ால், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா்.

சீக்கிய குடும்பத்தினா் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாகத் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலைக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது’’ என்றாா்.

கைது செய்யப்பட்ட நபா் 2005-ஆம் ஆண்டு நிகழ்த்திய கொள்ளைச் சம்பவம் சாா்ந்த குற்றம் தொடா்பாக 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் முதல்வா் இரங்கல்:

அமெரிக்காவில் சீக்கியா்கள் நால்வா் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதற்கு பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் இரங்கல் தெரிவித்துள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக உயா்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டுமென வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கும் அவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

சிரோமணி அகாலி தளம் தலைவா் சுக்பீா் சிங் பாதல் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘‘அமெரிக்க கொலை சம்பவம் உலக நாடுகளிலும் பஞ்சாபிலும் உள்ள சீக்கியா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள சீக்கியா்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அதிகாரிகளுடன் தொடா்புகொண்டு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் மேற்கொள்ள வேண்டும்’’ எனக் கோரினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com