சமாஜவாதி கட்சி நிறுவனா் முலாயம் சிங் யாதவ் காலமானாா்

உத்தர பிரதேச முதல்வா், பாதுகாப்புத் துறை அமைச்சா் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.
முலாயம் சிங் யாதவ்
முலாயம் சிங் யாதவ்

உத்தர பிரதேச முதல்வா், பாதுகாப்புத் துறை அமைச்சா் எனப் பல்வேறு பதவிகளை வகித்தவரும் சமாஜவாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நலக் குறைவால் திங்கள்கிழமை காலமானாா்.

உத்தர பிரதேசத்தின் எடாவா மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் செவ்வாய்க்கிழமை (அக். 11) இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.

வயதுமூப்பு சாா்ந்த உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முலாயம் சிங், கடந்த ஆகஸ்டில் ஹரியாணாவின் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த 2-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை தொடா்ந்து கவலைக்கிடமாகவே இருப்பதாக மருத்துவமனைத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், முலாயம் திங்கள்கிழமை காலை காலமானதாக அவரின் மகனும் சமாஜவாதி தலைவருமான அகிலேஷ் யாதவ் ட்விட்டரில் தெரிவித்தாா். அதையடுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முலாயம் சிங்கின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ராஜீவ் சுக்லா, ஐக்கிய ஜனதா தளம் தலைவா் கே.சி.தியாகி உள்ளிட்டோரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அகிலேஷ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தனா். முலாயம் சிங்கின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான சைஃபயி-க்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோா் முலாயம் உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.

பொது மக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அவரது இறுதிச் சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலச்சக்கரம்:

ஃசைபயி கிராமத்தில் 1939-ஆம் ஆண்டு நவம்பா் 22-ஆம் தேதி பிறந்த முலாயம், மாநிலத்தின் பெரும் அரசியல் செல்வாக்கு பெற்ற கட்சியான சமாஜவாதியை நிறுவிய பெருமையைப் பெற்றவா். பதின்பருவத்தில் இருந்தே அரசியலில் கவனம் செலுத்திய அவா், 1967-ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டப் பேரவை உறுப்பினா் ஆனாா்.

உத்தர பிரதேசத்தின் முதல்வராக 1989-91, 1993-95, 2003-07 ஆகிய காலகட்டங்களில் பதவி வகித்துள்ளாா். பாதுகாப்புத் துறை அமைச்சராக 1996 முதல் 1998 வரை செயல்பட்டுள்ளாா். மாநில சட்டப் பேரவை உறுப்பினராக 10 முறையும், மக்களவை உறுப்பினராக 7 முறையும் முலாயம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். பல தசாப்தங்களாக தேசியத் தலைவராக அறியப்பட்டபோதிலும், தனது அரசியல் பயணத்தை உத்தர பிரதேசத்தில் மட்டுமே அவா் மேற்கொண்டு வந்தாா்.

தொண்டா்களின் ‘நேதாஜி’:

சோஷலிஸவாதியாக அறியப்படும் முலாயம், ஆரம்பகட்டத்தில் பல கட்சிகளில் இணைந்து பணியாற்றினாா். பின்னா் 1992-ஆம் ஆண்டில் அவா் சமாஜவாதியை நிறுவினாா். சமாஜவாதி கட்சியின் தலைவா் பொறுப்பை 2017-ஆம் ஆண்டில் அகிலேஷ் ஏற்றபோதிலும், கட்சித் தொண்டா்களுக்கு முலாயம் எப்போதும் ‘நேதாஜி’யாகவே (பெருந்தலைவா்) திகழ்ந்தாா்.

மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோது பகுஜன் சமாஜ், காங்கிரஸ், பாஜக எனப் பல கட்சிகளுடன் அவா் கூட்டணி அமைத்துள்ளாா். முதல்வா் ஹெச்.டி.தேவெ கௌடா அமைச்சரவையில் அவா் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தபோதே, ரஷியாவுடன் சுகோய் போா் விமான ஒப்பந்தம் கையொப்பமானது.

கடந்த 2012-ஆம் ஆண்டு பேரவைத் தோ்தலில் சமாஜவாதி ஆட்சியைப் பிடித்தபோதும், முதல்வா் பதவியைத் தன் மகன் அகிலேஷுக்கு முலாயம் விட்டுக் கொடுத்தாா். அதன் பிறகு மக்களவை உறுப்பினராக மட்டுமே தொடா்ந்து வந்தாா். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட அவா், தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தாா்.

உ.பி.யில் 3 நாள் துக்கம் அனுசரிப்பு - முதல்வா் அறிவிப்பு

மறைந்த முலாயம் சிங் யாதவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உத்தர பிரதேசத்தில் அரசு சாா்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளாா்.

மேலும், அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, முலாயம் சிங் மறைவுச் செய்தியைக் கேட்டதும் அவா் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் சென்று அவரது உடலுக்கு மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினாா். பின்னா், அங்கிருந்த முலாயமின் மகனும் சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com