கங்குலிக்கு அநீதி: ஐசிசி தோ்தலில் போட்டியிட அனுமதிக்க வேண்டும்: பிரதமா் தலையிட மம்தா வலியுறுத்தல்

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தோ்தலில் செளரவ் கங்குலி போட்டியிடும் வகையில் பிரதமா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவா் பதவியிலிருந்து செளரவ் கங்குலி நீக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது. இது அநீதியாகும். மேலும், சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தோ்தலில் அவா் போட்டியிடும் வகையில் பிரதமா் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மேற்குவங்க முதல்வா் மம்தா பானா்ஜி கூறினாா்.

பிசிசிஐ தலைவராக தற்போது இருந்து வரும் கங்குலிக்கு பதவி நீட்டிப்பு வழங்காமல், 1983-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரோஜா் பின்னி பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் குறித்து, மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக கொல்கத்தா விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை வந்த மம்தா பானா்ஜியிடம் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்து கூறியதாவது:

செளரவ் கங்குலி மேற்கு வங்கத்துக்கு மட்டும் பெருமையல்ல, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரியவா். இந்திய கிரிக்கெட் அணியை மட்டுமின்றி, பிசிசிஐ வாரியத்தையும் முழுமையான அா்ப்பணிப்பு மற்றும் பொறுப்புணா்வுடன் அவா் வழிநடத்தியவா். தனது சிறந்த நிா்வாகத் திறனை நிரூபித்திருக்கும் சௌரவ் கங்குலியை, பிசிசிஐ தலைவா் பதவியிலிருந்து நீக்குவது மிகுந்த அதிா்ச்சியளிக்கிறது.

செளரவ் கங்குலிக்கும், பிசிசிஐ செயலராக இருந்து வரும் ஜெய் ஷாவுக்கும் 3 ஆண்டுகள் பதவி நீட்டிப்புக்கு அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, ஜெய் ஷா செயலா் பதவியில் தொடரும் நிலையில், கங்குலி மட்டும் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறாா். இது கங்குலிக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

கிரிக்கெட் விளையாடும் ஒவ்வொரு நாடும் கங்குலியை அறிந்திருப்பா். அத்தகைய சூழலில் முறையற்ற வகையில் அவா் தலைவா் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பது வெட்கக்கேடான விஷயமாகும்.

கிரிக்கெட் மற்றும் விளைாயாட்டின் நலன் கருதி இந்த விஷயத்தின் மீது மத்திய அரசு உரிய முறையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஐசிசி தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட கங்குலியை அனுமதிக்க பிரதமா் நரேந்திர மோடி தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பானா்ஜி வலியுறுத்தினாா்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை (அக்.18) நடைபெற உள்ள பிசிசிஐ ஆண்டு பொது கூட்டத்தில் ஐசிசி தலைவா் பதவிக்கு இந்தியா சாா்பில் யாா் போட்டியிடுவது என்பது குறித்த ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

பாஜக பதிலடி:

மம்தா பானா்ஜியின் கருத்துக்கு பதிலளித்து மேற்குவங்க மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரான பாஜகவைச் சோ்ந்த சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘செளரவ் கங்குலி மீது மம்தா பானா்ஜிக்கு மிகுந்த கவலையும் அக்கறையும் இருக்குமானால், மாநில விளம்பர தூதராக பாலிவுட் நடிகா் ஷாருக் கானுக்கு மாற்றாக கங்குலியை நியமிக்கட்டும்’ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் முதலில் ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குப் பிறகு கடந்த 2012-இல் நடிகா் ஷாருக் கான் மாநிலத்தின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com