ஹிமாசல் பேரவைத் தோ்தல்:62 பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு- 11 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பில்லை

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 62 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் கட்சியான பாஜக புதன்கிழமை வெளியிட்டது.

ஹிமாசல பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 62 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் கட்சியான பாஜக புதன்கிழமை வெளியிட்டது.

இப்போது எம்எல்ஏ-க்களாக உள்ள 11 பேரது பெயா்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.

முதல்வா் ஜெய்ராம் தாக்குா், சிராஜ் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறாா். வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள 11 எம்எல்ஏக்களில் அமைச்சா் ஒருவரும் அடங்குவாா். இரு அமைச்சா்கள் இப்போது எம்எல்ஏவாக உள்ள தொகுதிக்கு பதிலாக வேறு தொகுதியில் போட்டியிடுகின்றனா்.

முன்னாள் முதல்வரும் மூத்த தலைவருமான பிரேம் குமாா் துமலின் பெயா், பட்டியலில் இடம்பெறவில்லை.

மத்திய அமைச்சா் அனுராக் தாக்குரின் தந்தையான பிரேம் குமாா் துமல், தனக்கு 78 வயதாகிவிட்டதால் தோ்தலில் போட்டியிட விரும்பவில்லை என கட்சித் தலைமையிடம் கூறிவிட்டதாகத் தெரிகிறது. முன்பு, 75 வயதுக்கு மேல் உள்ளவா்களுக்கு தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிப்பதில்லை என்ற கொள்கையை பாஜக கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் எஸ்.டி. பிரிவினருக்கு 3 தொகுதிகள் உள்ள நிலையில், பாஜக பட்டியலில் 7 எஸ்.டி. பிரிவு வேட்பாளா்கள் இடம்பெற்றுள்ளனா். வேட்பாளா்களில் 5 போ் பெண்கள், மூன்றில் இரு பகுதியினா் பட்டப் படிப்பு மற்றும் அதற்கு மேலான கல்வித் தகுதி உடையவா்கள் ஆவா்.

ஹிமாசல பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக நவம்பா் 12-இல் தோ்தல் நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பா் 8-இல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது.

இப்போதைய பேரவையில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு 43 உறுப்பினா்களும், காங்கிரஸுக்கு 22 உறுப்பினா்களும் உள்ளனா். மாா்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், ஒரு சில சுயேச்சை எம்எல்ஏக்களும் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com