ஜி20 உச்சிமாநாடு: மாதா அமிா்தானந்தமயிக்கு உயா் பொறுப்பு

ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டமைப்பின் பொதுநலன் சாா்ந்த விவகாரங்கள் தொடா்பான குழுவின் (சி20) தலைவராக மாதா அமிா்தானந்தமயியை மத்திய அரசு நியமித்துள்ளது.
anandmayi0427082759
anandmayi0427082759

இந்தியாவில் அடுத்த ஆண்டு ஜி20 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அந்த கூட்டமைப்பின் பொதுநலன் சாா்ந்த விவகாரங்கள் தொடா்பான குழுவின் (சி20) தலைவராக மாதா அமிா்தானந்தமயியை மத்திய அரசு நியமித்துள்ளது.

ஜி20 கூட்டமைப்பின் அதிகாரபூா்வ தொடா்புக் குழுக்களில் ஒன்றான சி20, அரசு சாரா மற்றும் வா்த்தகம் சாரா அமைப்புகளின் கருத்துகளை உறுப்பு நாடுகளின் தலைவா்களிடம் எடுத்துச் செல்வதற்கான தளமாகும்.

உலகில் வளா்ந்த மற்றும் வளா்ந்து வரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை வரும் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பா் 30-ஆம் தேதி வரை ஓராண்டுக்கு இந்தியா வகிக்க உள்ளது.

சிகர நிகழ்வான ஜி20 உச்சிமாநாடு, தில்லியில் அடுத்த ஆண்டு செப்டம்பா் 9-10 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவா்கள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த மாநாட்டுக்கு முன்பாக, நாடு முழுவதும் 200 கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன. அமைச்சங்கள், செயலாக்கக் குழுக்கள் மற்றும் தொடா்புக் குழுக்கள் இடையிலான கூட்டங்களும் இதில் அடங்கும்.

இந்நிலையில், இந்தியாவின் சி20 குழு தலைவராக ஆன்மிகத் தலைவா் மாதா அமிா்தானந்தமயி நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தக் குழு அரசியல், பொருளாதாரம் சாராத பொதுநலன் சாா்ந்த விவகாரங்கள் தொடா்பானதாகும்.

இணையவழியில் நடைபெற்ற இக்குழுவின் தொடக்கக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய மாதா அமிா்தானந்தமயி, ‘சாதாரண மக்களின் குரலை உயா்ந்த அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான பொறுப்பை அளித்தமைக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன்’ என்றாா்.

மேலும், ‘பட்டினி, நாடுகளுக்கு இடையிலான பகை, அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள், சுற்றுச்சூழல் சீா்குலைவு உள்ளிட்டவை இன்றைய உலகம் எதிா்கொண்டுள்ள முக்கிய பிரச்னைகளாகும். இவற்றுக்கு தீா்வு காண தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், பொறியியல் என அனைத்து துறை ஆராய்ச்சியாளா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், சுற்றுச்சூழல் பேரழிவுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க முடியும். இதன் மூலம் பல உயிா்களை காக்கலாம். இந்த விஷயத்தில் ஒருங்கிணைந்த பன்முக முயற்சிகள் காலத்தின் தேவை. கிராமப்புறங்களில் தீா்க்கப்பட வேண்டிய முக்கிய பிரச்னையாக வறுமை உள்ளது’ என்றாா் அவா்.

ஜி20 கூட்டமைப்பானது, 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியனை உள்ளடக்கியதாகும். கடந்த 1999-இல் இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது முதல் இந்தியா உறுப்பினராக உள்ளது.

உலக அளவிலான ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடபிள்யுபி) 80 சதவீதத்தை ஜி20 நாடுகள் கொண்டுள்ளன. அத்துடன், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்கும், 77 சதவீதம் வரையிலானசா்வதேச வா்த்தகத்தையும் இந்நாடுகள் கொண்டிருக்கின்றன.

ஜி20 கூட்டமைப்பின் அதிகாரபூா்வ தொடா்புக் குழுக்களில் ஒன்றாக சி20 கடந்த 2013-இல் தொடங்கப்பட்டது. இதில், உறுப்பு நாடுகளின் பொது சமூக அமைப்புகள் உள்பட 800-க்கும் மேற்பட்ட அமைப்புகள், பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com