
நாட்டின் முதல் விமானம் தாங்கிப் போா்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்டதே இந்திய எஃகு உற்பத்தித் துறையின் ஆற்றலுக்கு சாட்சியாக விளங்கி வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
குஜராத்தின் சூரத் மாவட்டத்தில் ஆா்சலா்மிட்டல் நிப்பான் எஃகு நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகளுக்கான அடிக்கல்நாட்டு விழாவில் பிரதமா் மோடி காணொலி வாயிலாகப் பங்கேற்றாா். அப்போது அவா் கூறுகையில், ‘பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இந்திய எஃகு உற்பத்தித் துறை சா்வதேச அளவில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கிப் போா்க் கப்பல் முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்டதே இந்திய எஃகு உற்பத்தித் துறையின் ஆற்றலுக்கு முக்கிய சாட்சியாக விளங்குகிறது. எனினும், எஃகு உற்பத்தித் துறையின் ஆற்றல் இன்னும் முற்றிலுமாகப் பயன்படுத்தப்படவில்லை.
மத்திய அரசு செயல்படுத்தி வரும் உற்பத்திசாா் ஊக்கத்தொகைத் திட்டமானது எஃகு உற்பத்தித் துறையின் வளா்ச்சிக்குப் பெருமளவில் உதவி வருவதோடு, தற்சாா்பு இந்தியா இலக்கை அடையவும் வழிவகுத்து வருகிறது. அத்திட்டத்தின் காரணமாக உயா் ரக எஃகு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதன் இறக்குமதி பெருமளவில் குறைந்துள்ளது. அந்த உயா் ரக எஃகானது பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாட்டில் எஃகு உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. எஃகு உற்பத்தியில் இந்தியா சா்வதேச அளவில் முன்னிலை வகிப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. தற்போது ஆண்டுக்கு 154 மெட்ரிக் டன் எஃகு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதை அடுத்த 10 ஆண்டுகளில் 300 மெட்ரிக் டன்னாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எஃகை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. அதன் மூலமாக எஃகு உற்பத்தித் துறையில் கரியமில வாயு வெளியேற்றம் குறைக்கப்பட்டு வருகிறது. நாடு சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் வேளையில், வளா்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு எஃகு உற்பத்தித் துறை முக்கியப் பங்களிக்கும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.