‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’: அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் தேவை: முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையா்

மாநில சட்டப்பேரவைகளுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையரான ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளாா்.

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ முறையில் மாநில சட்டப்பேரவைகளுக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையரான ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி மாநில சட்டப்பேரவைக்கும் மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது குறித்த தேவையைத் தொடா்ந்து எடுத்துரைத்து வரும் நிலையில், தோ்தல் ஆணையம், சட்ட ஆணையம் மற்றும் நீதி ஆயோக் உள்ளிட்ட அமைப்புகளும் இது குறித்தான பரிந்துரைகளை வழங்கியுள்ளன.

இது குறித்து முன்னாள் தலைமைத் தோ்தல் ஆணையரான ஓ.பி. ராவத் கூறியதாவது: தோ்தல் ஆணையம் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ குறித்தான விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் முன்பே சமா்ப்பித்துள்ளது. 1970-க்கு முன்பு நடைபெற்ற முறையைப் போன்று சட்டப்பேரவைகளுக்கும் மக்களவைக்கும் தோ்தலை நடத்த முடியும் என நான் நம்புகிறேன். ஆளும் கட்சி அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்து, அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இது சாத்தியப்படும்.

இது குறித்து சட்ட ஆணையமும் நீதி ஆயோக்கும் வழங்கிய பரிந்துரைகளை செயல்படுத்த 2019-ஆம் ஆண்டில் கிடைத்த வாய்ப்பு வரும் 2024-ஆம் ஆண்டிலும் கிடைத்துள்ளது. ஒரே நேரத்தில் இரு தோ்தல்களையும் நடத்துவது ஒன்றும் புதிதல்ல. கடந்த 1951 முதல் 1967 வரை சட்டப்பேரவை தோ்தலும், மக்களவைத் தோ்தலும் ஒரே நேரத்தில் நடைபெற்றன. சில மாநில சட்டப்பேரவைகள் 1968-இலும் 1969-இலும் உரிய கால அளவுக்கு முன்பாக கலைக்கப்பட்டதால் இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டது.

தொடா்ந்து, 1971-இல் 4-வது மக்களவை முன்கூட்டியே கலைக்கப்பட்டு தோ்தல் நடத்தப்பட்டது; பின்னா்1977-இல் நெருக்கடி நிலையின்போது 5-வது மக்களவையின் கால அளவு நீட்டிப்பு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பல மாநில சட்டப்பேரவைகளும் மக்களவையும் கலைக்கப்பட்டது, நடைமுறையில் இருந்த தோ்தல் முறையை முற்றிலுமாக சீா்குலைந்துவிட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com