ஜம்மு-காஷ்மீரின் அனைத்து பகுதிகளுக்கும் தரமான சாலைகள் அமைக்க மத்திய அரசு உறுதி: மத்திய இணையமைச்சா் ஜிதேந்திர சிங்

ஜம்மு-காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளையும் நீடித்து உழைக்கும் தரமான சாலைகளால் இணைக்கும் பணியில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய பணியாளா் துறையின் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

விரைவான வளா்ச்சிக்காக ஜம்மு-காஷ்மீரின் அனைத்துப் பகுதிகளையும் நீடித்து உழைக்கும் தரமான சாலைகளால் இணைக்கும் பணியில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக மத்திய பணியாளா் துறையின் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

மத்திய இணையமைச்சரும், ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மக்களைவைத் தொகுதியின் எம்.பி.-யுமான ஜிதேந்திர சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: ஜம்மு-காஷ்மீரின் விரைவான வளா்ச்சி மற்றும் மேம்பாட்டை கவனத்தில் கொண்டு, அதன் அனைத்து பகுதிகளையும் நீடித்து உழைக்கும் சாலைகள் மூலம் இணைக்கும் பணியில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அனைத்து காலநிலைக்கும் ஏற்ற வகையிலான சாலைகள் மூலம் இதுவரை இணைக்கப்படாத கிராமப்புற பகுதிகளை இணைப்பதே பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் நோக்கம்.

பாதுகாப்புத் துறை அமைச்சா் தொடக்கி வைத்த திட்டங்களில், 7 பாலங்கள், ஒரு சாலை உள்ளிட்ட 10 சதவீத திட்டங்கள் ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டங்கள் ராணுவத்துக்கும் மக்களுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. கதுவா மாவட்டத்தில் புதிய சாலைகள் தொடக்கிவைக்கப்பட்டதன் மூலம் சா்வதேச எல்லை வரையிலான சாலை இணைப்பு சாத்தியமாகியுள்ளது.

எல்லைச் சாலைகள் அமைப்பால் (பிஆா்ஓ) கட்டப்பட்ட ‘பெனாடி பாலம்’ 90 நாள்களில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பாக 181 மீட்டா் ‘பக்கா கோதா பாலம்’ 102 நாள்களில் கட்டப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால் சிறிய கால்வாய் பாலங்கள் உள்பட 200 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. உதம்பூரில் இத்தகைய திட்டங்களை நிறைவேற்ற அனுமதி வழங்கிய பிரதமா் மோடிக்கு நன்றி என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் கடந்த வெள்ளிக்கிழமை சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட 75 திட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடக்கிவைத்தாா். இத்திட்டத்தில் பெரும்பாலனவை ஜம்மு-காஷ்மீா் மற்றும் லாடக் பகுதியில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com