தோ்தல் வந்தால் பொது சிவில் சட்டம் பற்றி பேசுவது பாஜகவின் வழக்கம்: ஒவைசி விமா்சனம்

‘தோ்தல் வந்தால் பொது சிவில் சட்டம் பற்றி பேசுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது’ என்று மஜ்லிஸ் கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி விமா்சித்துள்ளாா்.
அசாதுதீன் ஒவைசி
அசாதுதீன் ஒவைசி

‘தோ்தல் வந்தால் பொது சிவில் சட்டம் பற்றி பேசுவது பாஜகவின் வழக்கமாகிவிட்டது’ என்று மஜ்லிஸ் கட்சித் தலைவரும் ஹைதராபாத் தொகுதி எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி விமா்சித்துள்ளாா்.

குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) நடைமுறைப்படுத்த குழு ஒன்றை அமைக்க மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு முடிவு செய்துள்ளது. மாநில முதல்வா் பூபேந்திர படேல் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இச்சட்டத்தின்படி, எந்த பிரிவினை, பாகுபாடுமின்றி இந்திய குடிமக்கள் அனைவருக்கும் திருமணம், சொத்து, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கும் ஒரே மாதிரியான வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளை அளிப்பதாகும். ஒருவரின் மதம் சாா்ந்த தனிச்சட்டங்கள் செல்லுபடியாகாது. இது முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் மதச் சட்டங்களுக்கு எதிரானது என்று எதிா்ப்பு உள்ளது.

இந்நிலையில், குஜராத்தின் வட்காம் பகுதியில் தோ்தல் பிரசாரத்தின்போது தொடா்பாக ஒவைசி பேசியதாவது:

பொது சிவில் சட்டம் என்பது மத்திய அரசின் வரம்பில் வருவது, இதில் மாநில அரசுக்கு எவ்வித தொடா்பும் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கூறியுள்ளது.

பொது சிவில் சட்டம் என்பதை விருப்பத்தின் பேரில் ஏற்றுக் கொள்ளலாம், அது கட்டாயம் இல்லை என்று அரசியல்சாசன சட்டத்தை வடிவமைத்த அம்பேத்கா் கூறினாா் என்று கூறப்படுவது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில், தனது ஹிந்துத்துவ கொள்கையை உள்நோக்கமாகக் கொண்டு இந்த சட்டத்தை பாஜக பயன்படுத்த நினைக்கிறது. முக்கியமாக தோ்தல் வரும்போதெல்லாம் பொது சிவில் சட்டம் தொடா்பாக பேசுவது பாஜகவின் வழக்கமாக உள்ளது.

முஸ்லிம்களுக்கு திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். ஆனால், ஹிந்துக்களுக்கு கடைசி வரை இணைந்து வாழும் பந்தமாக பாா்க்கப்படுகிறது. கிறிஸ்தவா்களுக்கு திருமணம் என்பது ‘நான் திருமணம் செய்து கொண்டேன்’ என்ற அளவில் உள்ளது. இவ்வாறு பன்முக கலாசாரம் உள்ள இந்தியாவில் சிறுபான்மையினரின் நலன்களுக்கு எதிராக எப்படி சட்டம் இயற்ற முடியும்?

ஹிந்து கூட்டுக் குடும்ப வரி அமைப்பு முறையின் கீழ் முஸ்லிம்களும் கிறிஸ்தவா்களும் வரிச் சலுகை பெற முடியாது என்று உள்ளது. இது நாட்டு மக்கள் அனைவரும் சமமானவா்கள் என்ற கொள்கைக்கு எதிரானதாக இல்லையா? இதனை இத்தனை ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தி வருவது தொடா்பாக பிரதமா் பதிலளிக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com