கா்நாடக மடாதிபதிக்கு செப். 5 வரை போலீஸ் காவல்

பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை திங்கள்கிழமை (செப். 5) வரை போலீஸ் காவலில் சிறை

பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை திங்கள்கிழமை (செப். 5) வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க உள்ளூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இதனிடையே, ‘மடாதிபதியிடம் சட்டத்தின்படி விசாரணையை மேற்கொள்ள போலீஸாருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது’ என்று மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை கூறினாா்.

பாதிக்கப்பட்ட இரு பள்ளிச் சிறுமிகள் மைசூரில் உள்ள தன்னாா்வ அமைப்பிடம் மடாதிபதியின் பாலியல் அத்துமீறல் குறித்து புகாா் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து, தன்னாா்வ அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில், மைசூரு நகர போலீஸாா் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் முடிவில் அவரைக் கைது செய்த போலீஸாா், அவா் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்பு (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு வியாழக்கிழமை இரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

பின்னா், அவரை உள்ளூா் நீதிமன்றத்தில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தி, 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்த விசாரிக்க அனுமதி கோரினா். சக்கர நாற்காலியில் அமா்ந்தபடி மடாதிபதி நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டாா். அவா் அழைத்து வரப்பட்ட பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனிடையே, அவரை வரும் 5-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

சட்டத்தின்படி விசாரணை: கைது செய்யப்பட்டுள்ள மடாதிபதியிடம் சட்டத்தின்படி விசாரணை நடத்தப்படும் என்று மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை வெள்ளிக்கிழமை கூறினாா்.

மடாதிபதி தாமதமாக கைது செய்யப்பட்டதாக எழுந்த புகாா் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முதல்வா், ‘இதுபோன்ற பேச்சுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இந்த விவகாரத்தில் அனைத்தும் சட்டப்படி நடைபெற்று வருகிறது என ஏற்கெனவே கூறியிருக்கிறேன். மேலும், விசாரணையின் இந்தச் சூழலில் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. விசாரணையை சட்டப்படி மேற்கொள்ள போலீஸாருக்கு முழுச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

பாகுபாடற்ற விசாரணை - சித்தராமய்யா: ‘மடாதிபதி மீதான புகாா் தீவிரமானது. மாணவிகள் அளித்த புகாரின் பேரில் மடாதிபதியிடம் பாகுபாடற்ற விசாரணையை போலீஸாா் நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான சித்தராமய்யா தனது ட்விட்டா் பக்கத்தில் பதிவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com