பத்மஸ்ரீ  கமலா பூஜாரி மருத்துவமனைக்குள் நடனமாட கட்டாயப்படுத்தப்பட்டாரா..?

பத்மஸ்ரீ கமலா பூஜாரியை கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குள் டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பு நடனமாட வற்புறுத்திய சமூக சேவகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
பத்மஸ்ரீ  கமலா பூஜாரி மருத்துவமனைக்குள் நடனமாட கட்டாயப்படுத்தப்பட்டாரா..?
Published on
Updated on
2 min read



புவனேஸ்வர்: பத்மஸ்ரீ கமலா பூஜாரியை கட்டாக்கில் உள்ள மருத்துவமனைக்குள் டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பு நடனமாட வற்புறுத்திய சமூக சேவகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசாவில் உள்ள பராஜா பழங்குடியினர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவித்ததற்காகவும், நெல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பயிர்களின் நாட்டு விதைகளைப் பாதுகாத்ததற்காகவும் 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரி, சிறுநீரகக் கோளாறு காரணமாக கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

அவர் விரைவில் குணமடைய முதல்வர் நவீன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

பத்மஸ்ரீ கமலா பூஜாரியின் உடல்நிலையை அறிய ஆட்சியர் மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் கமலா பூஜாரியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ஐசியு) மாற்றப்பட்டார். அப்போது, அவரை பார்க்க வந்த சமூக சேவகர் மம்தா பெஹரா, வயதானவர் என்றும் பாராமல் நடனமாடுமாறு வலியுறுத்தியுள்ளார். தொடர் வற்புறுத்தலை அடுத்து அவரும் நடனமாடியுள்ளார். அவருடன் மம்தா பெஹராவும் நடனமாடியுள்ளார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.  

இதுகுறித்து கமலா பூஜாரி கோராபுட் மாவட்டத்தில் உள்ள தொலைக்காட்சி சேனல்களிடம் கூறியதாவது: 

“நான் ஒருபோதும் நடனமாட விரும்பவில்லை, ஆனால் அதைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. நான் பலமுறை மறுத்தேன், ஆனால் அவர் (மம்தா பெஹெரா) கேட்கவில்லை. அப்போது நான் உடல்நிலை சரியில்லாமல் சோர்வாக இருந்ததாக, ” கூறினேன் என்று கூறினார்.

திங்கள்கிழமை அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்நிலையில், கமலா பூஜாரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பு நடனமாட வற்புறுத்திய சமூக சேவகர் மம்தா பெஹெரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசாவில் உள்ள பராஜா பழங்குடியினர் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மம்தா பெஹெரா மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கத் தவறினால்,  பராஜா பழங்குடியினர் சமூகத்தினருடன் போராட்டம் நடத்துவோம் என்று பழங்குடியினர் சமூக சங்கமான ‘பராஜா சமாஜா’வின் தலைவர் ஹரிஷ் முதுலி கூறினார்.

சம்பவம் குறித்து மருத்துவமனையின் பதிவாளர் (நிர்வாகம்) டாக்டர் அபினாஷ் ரௌத் கூறுகையில்,  பூஜாரி சிறப்பு அறையில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது “பூஜாரியை நடனமாடச் செய்ததாகக் கூறப்படும் பெண், சிறப்பு அறைக்கு அவரைப் பார்க்க வந்ததாகக் கூறினார்.

கமலா பூஜாரியுடன் பல செல்ஃபிக்களை எடுத்த பெஹராவை தனக்குத் தெரியாது என்று பூஜாரியின் உதவியாளர் ரஜீப் ஹியால் கூறினார்.

பெஹெரா கூறுகையில், இந்த செயலுக்குப் பின்னால் தனக்கு எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்றும், “பூஜாரியின் சோம்பலைத் தவிர்க்க” விரும்பியே நடனமாட கேட்டுக்கொண்டதாக கூறினார்.

மாநிலத்தின் பட்டியல் பழங்குடியினர் மக்கள்தொகையில் சுமார் 4 சதவிகிதத்தைக் கொண்டுள்ள சமூகம் கமலா பூஜாரி சார்ந்த பராஜா சமூகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com