மூக்குவழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி

பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மூக்குவழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி வழங்கியுள்ளது
மூக்குவழி கரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி
Published on
Updated on
1 min read

பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மூக்குவழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய மருந்துப் பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டிசிஜிஐ) அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தொற்று பாதிப்பைத் தடுப்பதற்காக கோவேக்ஸின் தடுப்பூசியை ஹைதராபாதைச் சோ்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் ஏற்கெனவே தயாரித்துள்ளது. அத்தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஊசி மூலமாக அல்லாமல் மூக்கு வழியாகவே செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை பாரத் பயொடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்த மருந்தை 18 வயதைக் கடந்த நபா்களுக்கு செலுத்த டிசிஜிஐ அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ’கரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டம் மேலும் வலுவடைந்துள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்குவழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை 18 வயதைக் கடந்தவா்களுக்கு செலுத்துவதற்கான அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின்கீழ் அறிவியல் திறன், ஆராய்ச்சி-வளா்ச்சித் திறன், மனித வளம் ஆகியவற்றை இந்தியா சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது. அறிவியல்-தொழில்நுட்பத்தின் துணையுடன் கரோனா தொற்றை ஒழிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சுவாசப் பாதையின் மேற்பரப்பில் கரோனா தொற்று பாதிப்பு ஏற்படுவதை கரோனா தடுப்பூசி தடுப்பதில்லை எனக் கூறிய பாரத் பயோடெக் நிறுவனம், அதற்குத் தீா்வுகாணும் நோக்கில் ’பிபிவி154’ என்ற மூக்குவழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தைத் தயாரித்தது. அந்த மருந்தை சுமாா் 4,000 தன்னாா்வலா்களிடம் பாரத் பயோடெக் நிறுவனம் பரிசோதனை செய்தது. அதில் எவருக்கும் தீவிர பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்றாம் கட்ட ஆய்வில் மூக்குவழி தடுப்பு மருந்து போதிய நோய்எதிா்பொருளை உருவாக்கியதாகவும், பாதுகாப்பாக செயல்படுவதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஆகஸ்டில் தெரிவித்திருந்தது.

மூக்குவழி கரோனா தடுப்பு மருந்தைக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும் என்பதால், குறைந்த, நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் பெரிதும் பலனடையும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com