குற்றவியல் வழக்கு இருந்தாலும் கடவுச் சீட்டைப் புதுப்பிக்கலாம்: நீதிமன்றம் அதிரடி

குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளவரின் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மும்பை: குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளவர்களின் கடவுச்சீட்டை புதுப்பிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த அப்பாஸ் ககல்வாலா என்பவரின் மீது மோசடி வழக்கு நிலுவையில் உள்ள காரணத்தால், கடந்த 2018ஆம் ஆண்டு அவரது கடவுச்சீட்டு புதுப்பிக்கும் விண்ணப்பத்தை கடவுச்சீட்டு அலுவலகம் நிராகரித்தது. மேலும், கடவுச்சீட்டை புதுப்பிக்க வேண்டுமெனில், வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தின் அனுமதி தேவை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடவுச்சீட்டை புதுப்பிக்க நீதிமன்ற அனுமதி கோரியதற்கு எதிராக அப்பாஸ் தரப்பில் மும்பை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019-ல் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் சஞ்சய் கங்காபூர்வாலா மற்றும் மாதவ் ஜம்தார் அமர்வு ஆகஸ்ட் 23ஆம் தேதி வழங்கியது.

முன்னதாக, அப்பாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் காந்தவாலா, கடவுச் சீட்டு புதுப்பிப்பதற்கு வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்றும், வெளிநாடு செல்வதற்கு மட்டுமே நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்றும் வாதிட்டார்.

மத்திய அரசுத் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், “கடவுச்சீட்டு சட்டம் 1967-ன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பிப்பவர்கள் மீது குற்ற வழக்குகள் இருந்தால் கடவுச்சீட்டு விநியோகிக்கும் அதிகாரியால் மறுக்க முடியும். எனவே, அப்பாஸ் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். வழக்கறிஞரின் வாதத்தை குறுக்கிட்ட நீதிபதிகள், “கடவுச்சீட்டு புதிதாக விண்ணப்பிப்பதற்கு மட்டுமே இது பொருந்தும் எனவும், புதுப்பிக்க பொருந்தாது” எனவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அப்பாஸின் கடவுச்சீட்டை புதுப்பிக்க நீதிமன்றத்தின் அனுமதியை வலியுறுத்தாமல் விண்ணப்பத்தை ஏற்க கடவுச்சீட்டு அலுவலகம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், மனுதாரர் வெளிநாடு செல்ல வேண்டுமெனில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com