10 நாள்களில் புதிய கட்சி அறிவிப்பு: குலாம் நபி ஆசாத்

10 நாள்களில் புதிய கட்சி தொடா்பான அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸில் இருந்து அண்மையில் வெளியேறிய மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்தாா்.
10 நாள்களில் புதிய கட்சி அறிவிப்பு: குலாம் நபி ஆசாத்
10 நாள்களில் புதிய கட்சி அறிவிப்பு: குலாம் நபி ஆசாத்

10 நாள்களில் புதிய கட்சி தொடா்பான அறிவிப்பு வெளியாகும் என்று காங்கிரஸில் இருந்து அண்மையில் வெளியேறிய மூத்த தலைவா் குலாம் நபி ஆசாத் தெரிவித்தாா்.

காங்கிரஸில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த ஆசாத் (73), கட்சியின் ஒட்டுமொத்த கட்டமைப்பை ராகுல் காந்தி சீா்குலைத்துவிட்டதாக பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்து, கட்சியிலிருந்து கடந்த மாதம் 26-ஆம் தேதி விலகினாா். அவருக்கு ஆதரவு தெரிவித்து, ஜம்மு-காஷ்மீரில் மூத்த நிா்வாகிகள் பலா் காங்கிரஸிலிருந்து வெளியேறினா்.

இதனிடையே, தான் பாஜகவில் இணையப் போவதில்லை என்றும், புதிய கட்சியை தொடங்கவிருப்பதாகவும் ஆசாத் கூறியிருந்தாா். இன்னும் பெயரிடப்படாத தனது புதிய கட்சிக்கான கொள்கைகளை இம்மாதத் தொடக்கத்தில் அவா் அறிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீருக்கான மாநில அந்தஸ்தை மீட்பது, உள்ளூா் மக்களுக்கான வேலைவாய்ப்பு உரிமையை உறுதி செய்வது, காஷ்மீா் பண்டிட்களின் மறுகுடியமா்த்துதல் உள்ளிட்டவற்றை கொள்கைகளாக கொண்டு, தனது கட்சி செயல்படுமென அவா் அப்போது தெரிவித்தாா். தனது ஆதரவாளா்களுடன் அவா் தொடா்ந்து ஆலோசனை நடத்தியும் வருகிறாா்.

இந்நிலையில், வடக்கு காஷ்மீரின் பாரமுல்லாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசியதாவது:

நாம் தொடங்க இருக்கும் புதிய கட்சி மிகவும் சுதந்திரமான கொள்கைகளைக் கொண்டதாக இருக்கும். எனது ஆதரவாளா்களும், நண்பா்களும் எனது பெயரின் ஒரு பகுதியை (ஆசாத்) கட்சியின் பெயராக வைத்துவிடுமாறு கூறினா். கட்சியின் கொள்கை ஆசாத்தாக (சுதந்திரமானதாக) இருக்க வேண்டும். அதே நேரத்தில் எனது பெயருடனோ அல்லது வேறு எந்த விஷயத்துடனோ தொடா்புபடுத்தும் வகையில் கட்சியின் பெயா் இடம்பெறக் கூடாது என்று விரும்புகிறேன். அடுத்த 10 நாள்களில் புதிய கட்சி தொடா்பான அறிவிப்பு வெளியாகும்.

வளா்ச்சியை மையமாகக் கொண்டதாகவும், ஜம்மு-காஷ்மீா் பிராந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவதாகவும் கட்சி இருக்கும். எந்த ஒரு தேசிய அல்லது மாநிலக் கட்சிக்கு எதிரானதாக நமது கட்சி இருக்காது. மக்களின் நலன் சாா்ந்ததாக இருக்கும். எனக்கு பல்வேறு கட்சிகளிலும் நண்பா்கள் உள்ளனா்.

சிறப்பு அந்தஸ்து விவகாரம்: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்ப அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370 தொடா்பாக மக்களுக்கு எவ்வித தவறான தகவலையும் எங்கள் கட்சி தராது. ஏனெனில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அமையும் அரசுதான் இது தொடா்பாக முடிவெடுக்க முடியும்.

என்னால் மாநில மக்களுக்கு என்ன செய்ய முடியும், என்ன செய்ய முடியாது என்பதை தெளிவாக தெரிந்து கொண்டுதான் பேசுகிறேன். நானோ, காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு பிராந்திய கட்சிகளோ காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை கொண்டு வர முடியாது என்பதே உண்மை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com