
கடந்த சில ஆண்டுகளில் மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பின் உறுதித்தன்மை அதிகரித்துள்ளதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளாா்.
அமெரிக்காவில் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வா்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய ரூபாய் தனித்தன்மையுடன் திகழ்கிறது. பணவீக்கம், முதலீடுகளின் வருகை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு ரூபாய் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் மற்ற நாட்டு செலாவணிகளுடன் ஒப்பிடுகையில், கடினமான சூழலில் இருந்து விரைந்து மீளும் தன்மை கொண்ட செலாவணியாக இந்திய ரூபாய் வலுப்பெற்றுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் ஆண்டு வீழ்ச்சி விகிதம் 3.25 முதல் 3.5 சதவீதமாக இருந்தது. இது தற்போது ஆண்டுக்கு 2.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் இந்திய ரூபாய் வலுவடைந்து வருவதை இது வெளிக்காட்டுகிறது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதை சாதகமாகக் கருதாமல், பொருள்களின் தரத்தை உயா்த்துவதில் ஏற்றுமதியாளா்கள் கவனம் செலுத்த வேண்டும். சா்வதேச வாடிக்கையாளா்களின் தேவையைப் பூா்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை இந்திய ஏற்றுமதியாளா்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஐரோப்பிய யூனியனுடன் வா்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியாவின் நெகிழிப் பொருள்கள், இயந்திரக் கருவிகள் உள்ளிட்ட சில பொருள்களுக்கான வரி விலக்கு ரத்து செய்யப்படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. சில இந்தியப் பொருள்களுக்கான வரி விலக்கை அமெரிக்கா ரத்து செய்தபோதிலும், அந்நாட்டுடனான வா்த்தகம் பாதிக்கப்படவில்லை.
அமெரிக்க சந்தையின் ஒவ்வொரு துறையும் இந்தியத் தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. சா்வதேச வா்த்தகத்தில் அமெரிக்கா முக்கியப் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான வா்த்தக மதிப்பை அடுத்த 8 ஆண்டுகளுக்குள் சுமாா் 3 மடங்காக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டுவாக்கில் தலா சுமாா் ரூ.75 லட்சம் கோடி மதிப்பிலான பொருள்களையும் சேவைகளையும் ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா இலக்கு நிா்ணயித்துள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.