நாடு தழுவிய ரத்ததான முகாம் தொடக்கம்: அமைச்சர் மாண்டவியா ரத்த தானம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 15 நாள் ரத்த தான முகாம் இன்று தொடங்கியது.
நாடு தழுவிய ரத்ததான முகாம் தொடக்கம்: அமைச்சர் மாண்டவியா ரத்த தானம்!

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு 15 நாள் ரத்ததான முகாம் இன்று தொடங்கியது. மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா சப்தர்ஜங் மருத்துவமனையில் அமைக்கப்பட்ட முகாமில் ரத்த தானம் செய்தார். 

இன்று முதல் அக்டோபர் 1-ஆம் தேதி வரை நடைபெறும் "ரக்தன் அம்ரித் மஹோத்சவ்" இன் ஒரு பகுதியாக ரத்த தானம் செய்ய குடிமக்கள் ஆரோக்யா சேது செயலி அல்லது இ-ரக்ட்கோஷ் போர்ட்டலில் பதிவு செய்யுமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார். 

இதுவரை நாடு முழுவதும் 5,857 முகாம்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது மற்றும் 5,58,959 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் இதுவரை 4 ஆயிரம் பேர் ரத்த தானம் செய்துள்ளனர். 

ரத்த தானம் மகத்தான தானம். அம்ரித் மஹோத்சவின் கீழ் ரத்த தானம் செய்யுங்கள். இந்த சிறந்த பணியில் நீங்களும் ஒரு பகுதியாக இருங்கள் என்று மாண்டவியா இந்தியில் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இந்த இயக்கமானது ஒரு நாளில் ஒரு லட்சம் யூனிட் ரத்தத்தைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், தன்னார்வ ரத்த தானங்களின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒரு யூனிட் என்பது 350 மில்லி ரத்தமாகும். ஒவ்வொரு ரத்த தானம் செய்பவரும் ஒரு உயிர் காப்பான் என்று மாண்டவியா தெரிவித்தார். 

நாட்டில் 3,900க்கும் மேற்பட்ட இரத்த வங்கிகள் இயங்கி வருகின்றன. அதில் இதுவரை, 3,600 இரத்த வங்கிகள் இ-ரக்ட்கோஷ் போர்ட்டலுடன் இணைக்கப்பட்டுள்ளன, மீதமுள்ளவற்றை அதே போர்ட்டலுடன் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

ஒரு சாதாரண ஆரோக்கியமான நபரின் உடலில் 5-6 லிட்டர் இரத்தம் இருக்கும். ஒவ்வொரு 3 மாதங்களுக்குப் பிறகு ஒருவர் இரத்த தானம் செய்யலாம். தானம் செய்த பிறகு, 35 முதல் 42 நாள்கள் வரை அந்த ரத்தத்தைப் பயன்படுத்த முடியும். ரத்தம் பிளாஸ்மா, சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகள் போன்ற கூறுகளால் ஆனது. உறைந்த பிளாஸ்மாவை ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம், சிவப்பு இரத்த அணுக்கள் 35-42 நாள்கள் வரை பயன்படுத்தப்படலாம். ஐந்து நாள்களுக்குள் பிளேட்லெட்டுகளைப் பயன்படுத்த வேண்டும். 

மேலும், அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், சுகாதார அமைப்புகள், ரத்த வங்கிகள் மற்றும் பிற பங்குதாரர்களுக்கு ரத்த தானம் பற்றிய தகவல்களைப் பரப்புமாறு மாநிலங்களுக்குக் கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com