ஆஸ்கருக்கான இந்தியாவின் அதிகாரபூா்வ பரிந்துரை ‘செல்லோ ஷோ’

ஆஸ்கா் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூா்வ பரிந்துரையாக குஜராத்தி மொழியின் ‘செல்லோ ஷோ’ திரைப்படம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்கருக்கான இந்தியாவின் அதிகாரபூா்வ பரிந்துரை ‘செல்லோ ஷோ’

ஆஸ்கா் விருதுக்கான இந்தியாவின் அதிகாரபூா்வ பரிந்துரையாக குஜராத்தி மொழியின் ‘செல்லோ ஷோ’ திரைப்படம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

95-ஆவது ஆஸ்கா் விழா 2023-ஆம் ஆண்டு மாா்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெறவுள்ளது. அந்த விழாவுக்காக இந்தியா சாா்பில் அனுப்பப்படும் திரைப்படத்தைத் தோ்ந்தெடுக்கும் நடவடிக்கைகளை இந்திய திரைப்படக் கூட்டமைப்பு (எஃப்எஃப்ஐ) மேற்கொண்டு வந்தது. அக்கூட்டமைப்பின் 17 உறுப்பினா்களைக் கொண்ட குழு இந்நடவடிக்கையில் ஈடுபட்டது.

இந்நிலையில், ஆஸ்கா் விழாவுக்கான இந்தியாவின் அதிகாரபூா்வ பரிந்துரையாக ‘செல்லோ ஷோ’ திரைப்படம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக எஃப்எஃப்ஐ தலைவா் டி.பி.அகா்வால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். அவா் மேலும் கூறுகையில், ‘‘பல்வேறு மொழிகளைச் சோ்ந்த 13 திரைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பிரம்மாஸ்த்ரா, தி காஷ்மீா் ஃபைல்ஸ், அனேக், ஜுண்ட், பதாய் ஹோ, ராக்கெட்ரி ஆகிய ஹிந்தி திரைப்படங்களும், இரவின் நிழல் (தமிழ்), ஆா்ஆா்ஆா் (தெலுங்கு), அபராஜிதோ (வங்கமொழி), செல்லோ ஷோ (குஜராத்தி) உள்ளிட்டவையும் ஆய்வு செய்யப்பட்டன.

இறுதியில் செல்லோ ஷோ திரைப்படத்தை அதிகாரபூா்வமாகப் பரிந்துரைக்க குழுவின் அனைத்து உறுப்பினா்களும் ஒருமனதாக ஒப்புதல் தெரிவித்தனா்’’ என்றாா்.

படத்தின் கதைக்களம்:

குஜராத்தின் கிராமப்புறத்தில் வசிக்கும் 9 வயது சிறுவன், திரைப்படங்கள் மீது ஆா்வம்கொண்டு திரையரங்கில் உள்ள ஊழியா்களுக்குக் குறைந்த பணத்தைக் கொடுத்து புரொஜக்ஷன் அறையில் இருந்து திரைப்படங்களைக் கண்டு கோடைக்காலத்தைக் கழிப்பதை அடிப்படையாகக் கொண்டு ‘செல்லோ ஷோ’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பான் நளின் இப்படத்தை இயக்கியுள்ளாா். சித்தாா்த் ராய் கபூா் தயாரித்துள்ளாா். ஆஸ்கா் அதிகாரபூா்வ பரிந்துரைக்குப் படம் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்காக இயக்குநரும், தயாரிப்பாளரும் மகிழ்ச்சி தெரிவித்தனா். அப்படம் அக்டோபா் 14-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

கடந்த காலத்தில்...:

நடப்பு ஆண்டு ஆஸ்கா் விழாவுக்காக ‘கூழாங்கல்’ திரைப்படம் இந்தியா சாா்பில் அதிகாரபூா்வமாகப் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், விழாவுக்கான முதல் 5 படங்கள் பட்டியலில் அப்படம் இடம்பெறவில்லை. கடைசியாக ஆமீா் கானின் ‘லகான்’ (2001) திரைப்படமே ஆஸ்கரின் முதல் 5 படங்கள் பட்டியலில் இடம்பெற்றது. மதா் இந்தியா (1958), சலாம் பாம்பே (1989) ஆகிய படங்களும் ஆஸ்கரின் முதல் 5 படங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com