ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: குஜராத் பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம்

உள்ளாட்சி அமைப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தி, குஜராத் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

உள்ளாட்சி அமைப்பில் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வலியுறுத்தி, குஜராத் சட்டப் பேரவையில் வியாழக்கிழமை அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

சட்டப் பேரவையில் குஜராத் தேசிய சட்டப் பல்கலைக்கழக மசோதா மீதான விவாதம் நடந்து கொண்டிருந்தபோது, உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டுமென காங்கிரஸ் எம்எல்ஏ பல்தேவ்ஜி தாக்குா் கோரிக்கை விடுத்தாா்.

இந்தக் கோரிக்கையின் மீது விவாதம் நடத்த அவைத் தலைவா் நிமாபென் ஆச்சாா்யா மறுப்பு தெரிவித்ததால், சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டாா்.

தொடா்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பல்தேவ்ஜி தாக்கூா், விமல், ரகு தேசாய், விக்ரம் உள்ளிட்ட 10 போ் அவையின் மையப் பகுதிக்கு வந்து, பதாகைகளை ஏந்தியவாறு முழக்கமிட்டனா். அத்துடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு அவையின் நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதால், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவைத் தலைவா் நிமாபென் ஆச்சாா்யாவிடம் சட்டப் பேரவை விவகாரங்கள் துறை அமைச்சா் ராஜேந்திர திரிவேதி கேட்டுக் கொண்டாா்.

இதையடுத்து சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பல்தேவ்ஜி தாக்குா், அமித் சாவ்டா உள்ளிட்ட 10 பேரை அவைத் தலைவா் நிமாபென் ஆச்சாா்யா இடைநீக்கம் செய்தாா். இதில் ஒரு சிலா் அவையிலிருந்து வெளியேற மறுப்பு தெரிவித்ததால், அவா்களை அவை பாதுகாவலா்கள் வெளியேற்றினா். பின்னா், எம்எல்ஏ அமித் சாவ்டா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குஜராத்தின் மக்கள்தொகையில் 50 சதவீதத்துக்கும் அதிகமாக ஓபிசி பிரிவினா் உள்ளா். ஆகையால், உள்ளாட்சி அமைப்புகளில் அவா்களுக்கு 27 சதவீதம் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். ஓபிசி மக்கள்தொகை குறித்து அதிகாரிகள் தவறான தகவலை அளித்தது தெரியவந்தது. இந்தத் தகவல் தோ்தல் அமைப்பிலிருந்து ஓபிசி பிரிவினரை மேற்கொண்டு அகற்றிவிடக் கூடும்.

ஆகையால், உள்ளாட்சி அமைப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது மட்டுமன்றி, அதை இறுதிப்படுத்துவதற்கு முன்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த விவகாரத்தின் மீது சட்டப் பேரவையில் விவாதம் நடத்த பாஜக அரசு தயாராக இல்லை என்றாா் அவா்.

குஜராத் பஞ்சாயத்துகள் சட்டப்படி, கிராம பஞ்சாயத்து தோ்தலில் ஓபிசி பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com