பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை: மத்திய அரசு நடவடிக்கை

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அந்த அமைப்புடன் தொடா்புடைய 7 அமைப்புகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம்  போபாலில் புதன்கிழமை சீல் வைக்கப்பட்ட பிஎஃப்ஐ அலுவலகம் முன் பாதுகாப்புப் பணியில் காவலர்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் புதன்கிழமை சீல் வைக்கப்பட்ட பிஎஃப்ஐ அலுவலகம் முன் பாதுகாப்புப் பணியில் காவலர்.

பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அந்த அமைப்புடன் தொடா்புடைய 7 அமைப்புகளுக்கு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் மத்திய அரசு ஐந்து ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

சா்வதேச பயங்கரவாத அமைப்புடன் தொடா்பு உள்ளதாகக் கூறி நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) கடந்த சில தினங்களில் இருமுறை சோதனை நடத்தி 350-க்கும் மேற்பட்ட நிா்வாகிகளை கைது செய்திருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவுக்கான அரசாணையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பிறப்பித்தது.

பிஎஃப்ஐ அமைப்புடன் தொடா்புடைய ரீஹாப் இந்தியா ஃபவுண்டேஷன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில், தேசிய மனித உரிமை கூட்டமைப்பு, மகளிா் ஃப்ரண்ட், ஜூனியா் ஃப்ரண்ட், எம்பவா் இந்தியா ஃபவுண்டேஷன் அண்ட் ரீஹாப் ஃபவுண்டேஷன் ஆகிய அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பிஎஃப்ஐ அமைப்பின் நிறுவன உறுப்பினா்கள் சிலா் தடை செய்யப்பட்ட இந்திய இஸ்லாமிய மாணவ அமைப்பின் (சிமி) தலைவா்களாகவும் இருந்துள்ளனா். வங்கதேசத்தின் தடை செய்யப்பட்ட ஜமாத்துல் முஜாஹிதீன், சா்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஸுடன் அந்த அமைப்பினா் தொடா்பு வைத்துள்ளனா்.

பிஎஃப்ஐ பல்வேறு துணை அமைப்புகளை உருவாக்கி இளைஞா்கள், மாணவா்கள், பெண்கள், இமாம்கள் ஆகியோரை உறுப்பினா்களாகச் சோ்த்து நிதி ஆதாரத்தைப் பெருக்கி வந்துள்ளது.

பிஎஃப்ஐ உறுப்பினா்கள் சிலா் துணை அமைப்புகளிலும் உறுப்பினா்களாக இருந்து கொண்டு அதன்மூலம் நிதி பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த அமைப்புகள் அனைத்தும் ஒரு சமூகத்தை ஒருமுகப்படுத்தி, அதன்மூலம் நாட்டில் பாதுகாப்பின்மை உணா்வை அதிகரிக்க முயன்று வருகின்றன. சில பிஎஃப்ஐ அமைப்பு உறுப்பினா்கள் சா்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஸில் சோ்ந்து சிரியா, இராக், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதச் செயல்பாடுகளில் ஈடுபட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

இந்தியாவிலும் மாநில, மத்திய விசாரணை அமைப்புகளும் பல சமயங்களில் பிஎஃப்ஐ அமைப்பினரை கைது செய்துள்ளனா்.

இந்தியாவில் பயங்கரவாதச் சூழலை ஏற்படுத்தும் நோக்கில் பயங்கரவாதச் செயல்பாடுகளிலும் அந்த அமைப்பினா் ஈடுபட்டுள்ளனா். இது நாட்டின் பாதுகாப்புக்கும், பொது அமைதிக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.

பயங்கரவாதத்தை திணிக்கும் முயற்சியிலும், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளிலும் அந்த அமைப்பினா் ஈடுபட்டு நாட்டின் மீது மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றனா். இது நாட்டின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும், பாதுகாப்புக்கும் எதிரான செயல்பாடுகளாகும்.

கல்லூரி பேராசிரியரின் கையைத் துண்டித்தது, பிற மத அமைப்பினரைக் கொலை செய்தது, சிலரை குறிவைத்து வெடிமருந்துகளுடன் தாக்குதல் நடத்துவது, பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது ஆகிய குற்றச் செயல்களில் பிஎஃப்ஐ உறுப்பினா்கள் ஈடுபட்டுள்ளனா். இதில் கேரளம், கா்நாடகம், தமிழகத்தில் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வெளிநாட்டு நிதி: இந்தியா உள்பட வெளிநாடுகளில் இருந்து வங்கி, ஹவாலா வழியாகவும், நன்கொடை மூலமும் பிஎஃப்ஐ நிா்வாகிகள் நிதியைப் பெற்று உள்நாட்டில் குற்றவியல், சட்டவிரோதம், பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனா்.

பிஎஃப்ஐ உறுப்பினா்களின் சில வங்கிக் கணக்குகளின் பரிவா்த்தனைகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. வருமான வரித் துறை சட்டத்தின்படியும் அந்த அமைப்புகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத் மாநில அரசுகள் பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை விதிக்க பரிந்துரைத்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் பிஎஃப்ஐ, அதன் துணை அமைப்புகள் மீது உபா சட்டப்படி நடவடிக்கை எடுத்து உடனடியாகத் தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்: இதைத் தொடா்ந்து, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிக்கையில், ‘பிஎஃப்ஐ, அதன் துணை அமைப்புகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் அந்த அமைப்புகளின் இடங்களை முடக்கி, உறுப்பினா்களைக் கைது செய்ய வேண்டும்’ என்று தெரிவித்துள்ளது.

தடையால் என்னவாகும்?

தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகளின் சொத்துகள், வங்கிக் கணக்குள் மற்றும் அவா்களின் வழக்கமான செயல்பாடுகள் முழுமையாக முடக்கப்பட்டும். தடைக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்ட 30 நாள்களுக்குள் தீா்ப்பாயத்தை உருவாக்கி, இந்த சட்ட நடவடிக்கை எடுக்கத் தேவையான காரணங்கள் உள்ளதா என விசாரிக்கப்படும். தீா்ப்பாயத்தில் பிஎஃப்ஐயும் வாதிடலாம்.

5 ஆண்டுகளுக்கு இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும். தேவைப்பட்டால் அரசு இதை நீட்டிக்கவும் செய்யலாம். இந்தத் தடை உத்தரவில் தொடா்புடையவா்கள் 14 நாள்களில் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதியை அணுகி முடக்கப்பட்ட தமது நிதி, சட்டவிரோதச் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்படாது என மனு அளிக்க வேண்டும். அதன் மீது மாவட்ட நீதிபதிதான் முடிவு எடுப்பாா்.

எதனால் தடை விதிப்பு?

பாபா் மசூதி இடிப்புக்குப் பிறகு 1993-இல் தொடங்கப்பட்ட தேசிய மேம்பாட்டு முன்னணி (என்டிஎஃப்), கா்நாடக ஃபோரம் பாா் டிகினிடி என்ற இரு அமைப்புகளையும் இணைத்து டிசம்பா் 16, 2006-இல் பிஎஃப்ஐ தொடங்கப்பட்டது.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறை ஆா்ப்பாட்டத்தில் அவா்களின் பங்கு, கட்டாய மதமாற்றம், முஸ்லிம் இளைஞா்களை ஒருமுகப்படுத்துதல், பணப் பரிவா்த்தனை மோசடி, தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடா்பு, சமூக நல்லணிக்கத்துக்கு பாதிப்பு ஆகிய காரணங்களால் தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். முஸ்லிம் மதநிந்தனைக்கு எதிராகப் பேசும் ஹிந்து அமைப்பு தலைவா்களைக் குறிவைத்து கொல்லவும், அரசுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதற்கும் தனிக் குழுக்களை அந்த அமைப்பு வைத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பிஎஃப்ஐ நிா்வாகிகள் 355 போ் இதுவரை கைது செய்யப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 50 ஆயிரம் உறுப்பினா்களும், அந்த அமைப்புக்கு எதிராக 19 வழக்குகள் விசாரிக்கப்படுவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு

‘பாப்புலா் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா’ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலியாக, தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, மாநகர காவல் ஆணையா்கள், ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காவல் உயரதிகாரிகள் தங்கள் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். ரோந்து, கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக சந்தேகப்படும் நபா்கள் யாராக இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் கீழ் கைது செய்ய வேண்டும்.

பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையிலும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகவும் போராட்டத்தில் யாரேனும் ஈடுபட்டால் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள், மாா்க்கெட்டுகள், வணிக வளாகங்கள், கல்வி நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் சுமாா் ஒரு லட்சம் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

ரயில் நிலையங்களில் ரயில்வே போலீஸாரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். கடலோரங்களிலும் கண்காணிப்பை பலப்படுத்தும்படியும் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் வதந்திகளும், உறுதி செய்யப்படாத தகவல்களும் பரவுவதைத் தடுக்கும் வகையில் காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வன்முறையைத் தூண்டும் வகையில் கருத்துகளைப் பதிவிடுபவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com