'இதுதான் புதிய இந்தியா'! பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை -யோகி ஆதித்யநாத் கருத்து!

'இதுதான் புதிய இந்தியா'! பிஎஃப்ஐ அமைப்புக்குத் தடை -யோகி ஆதித்யநாத் கருத்து!

இந்தியாவின் ஒற்றுமை, ஒழுக்கம், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் எந்தவொரு அமைப்பிற்கும் நாட்டில் இடமில்லை
Published on

இந்தியாவின் ஒற்றுமை, ஒழுக்கம், பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தரும் எந்தவொரு அமைப்பிற்கும் நாட்டில் இடமில்லை என்றும் இது தான் புதிய இந்தியா எனவும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமை இன்று (செப்.28) தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய மக்களுக்கு சேவை செய்வதற்காகத் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்தன. பல்வேறு இடங்களில் மதக் கலவரத்தைத் தூண்டுவதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன. 

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை ஆகியவை இணைந்து கடந்த 22ஆம் தேதி சோதனைகள் மேற்கொண்டன. 

இந்த சோதனையின் அடிப்படையில் தமிழகம், உத்தர பிரதேசம், கா்நாடகம், குஜராத், தில்லி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 350க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். 

மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) உள்பட 9 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. 

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. இது புதிய இந்தியா. இங்கு பயங்கரவாதத்திற்கும் குற்றவாளிகளுக்கும் அவற்றிற்கு துணைபோகும் அமைப்புகளுக்கும் இடமில்லை. அவர்களால் நாட்டின் ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com