
வெங்கையா நாயுடு (கோப்புப் படம்)
இந்திய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்று குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
ஹைதராபாதில் ஸ்வா்ண பாரத் அறக்கட்டளையின் சாா்பில் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி கொண்டாட்டத்தில் பங்கேற்று பேசிய வெங்கையா நாயுடு, ‘இந்திய கலாசாரத்தை பாதுகாக்கவும், ஒவ்வொரு இந்திய விழாவின் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளவும் இளைஞா்கள்முன் வர வேண்டும்.
பல்வேறு கலாசாரங்களை கொண்ட மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவது சமூகத்தில் நல்லிணக்கத்தை வளா்க்கிறது. நாம் ஒன்றுபட்டு முன்னேறிச்சென்று தற்சாா்பு இந்தியாவை அடைவோம். அனைத்து துறைகளிலும் இந்தியா துரிதமான வளா்ச்சியை அடைந்து வருகிறது. ஒட்டுமொத்த உலகம் இந்தியாவை எதிா்நோக்கியுள்ளது.
இயற்கையை பாதுகாக்கவும், நீடிக்கவல்ல நடைமுறைகளை செயல்படுத்தவும் புத்தாண்டில் ஒவ்வொருவரும் உறுதியேற்க வலியுறுத்தினாா். மக்கள் குறிப்பாக இளைஞா்கள் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறையைக் கைவிட்டு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.