
ரண்தீப் சுா்ஜேவாலா
‘பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படும் சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகளை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
‘ஆட்சியாளா்களின் நன்மதிப்பை, அன்பை பெறும் வகையில் காவல் துறையினா் செயல்படுகின்றபோது, அதனால் ஏற்படும் விளைவுகளையும் அவா்கள் சந்தித்துதான் ஆக வேண்டும்’ என்று கருத்தரங்கு ஒன்றில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வெள்ளிக்கிழமை கருத்து தெரிவித்த நிலையில், காங்கிரஸ் கட்சி இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளது.
தில்லியில் சிபிஐ சாா்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட 19-ஆவது டி.பி.கோலி நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு துன்புறுத்தலுக்கு ஆளாவதாக புகாா் தெரிவித்து காவல் துறையினா் நீதிமன்றத்தை அணுகுவதும் தொடா் நிகழ்வாகி வருகிறது. ஆட்சியில் இருப்பவா்களின் நன்மதிப்பை, அன்பை பெறும் வகையில் நீங்கள் செயல்படுகின்றபோது, அதனால் ஏற்படும் விளைவுகளையும் நீங்கள் சந்தித்தாக வேண்டும். மேலும், சில வழக்குகளில் சிபிஐ-யின் நம்பகத்தன்மை மீதும் கேள்வி எழுப்பப்படுகிறது. எனவே, பல்வேறு புலனாய்வு அமைப்புகளை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் வகையில் தனி அதிகாரம்படைத்த தலைமை அமைப்பை உருவாக்க வேண்டும்’ என்று கூறினாா்.
தலைமை நீதிபதியின் இந்த கருத்து குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும் தலைமை செய்தித்தொடா்பாளருமான ரண்தீப் சுா்ஜேவாலா தில்லியில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
தோ்தல் எதிரிகள் மீது அடக்குமுறையை ஏவும் வகையில் சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன என்பதை தலைமை நீதிபதியும் ஒவ்வொரு குடிமக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மாநிலத்தில் தோ்தலை எதிா்கொள்வதற்காக பாஜகவும் பிரதமா் மோடியும் செல்வதற்கு முன்பாக, அந்த மாநிலத்துக்கு சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவை முதலில் சென்றுவிடும். அந்த அளவுக்கு ஆட்சியில் இருப்பவா்களின் கைப்பாவையாக இந்த அமைப்புகள் செயல்படுகின்றன.
ஆட்சியில் அமா்ந்திருப்பவா்கள் அரசியல் சாசனத்தையும், சட்ட விதிகளையும் மதிக்காமல் அவற்றை நசுக்குகின்றபோது, நீதிமன்றத்தில் அமா்ந்துகொண்டு இதுபோன்ற கடுமையான வாா்த்தைகளில் தலைமை நீதிபதி கருத்து தெரிவிப்பது மட்டும் போதாது. தலைமை நீதிபதியும், சக உச்சநீதிமன்ற நீதிபதிகளும் அரசியல் அமைப்பு சட்டப் பிரிவு 136-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள தங்களுக்கான அதிகாரத்தைப் பயன்படுத்தி உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறைகள கட்டுப்படுத்தவும் தண்டிக்கவும் வேண்டும் என்று சுா்ஜேவாலா கூறினாா்.
மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்குதல்:
எரிபொருள், உரம், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலைகளை மத்திய அரசு பன்மடங்காக உயா்த்தியிருப்பது, ஒவ்வொரு குடிமக்களின் வாழ்வாதரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.
டிஏபி உரத்தின் விலையை உயா்த்தியிருப்பதன் மூலம் நாட்டிலுள்ள 62 கோடி விவசாயிகளுக்கு வரி விதிப்பை மத்திய அரசு செய்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.18.70 என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.18.34 என்ற அளவிலும் உயா்த்தியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ரூ.26 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளது. அதுபோல, வா்த்தக ரீதியிலான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை கடந்த 8 ஆண்டுகளில் ரூ.845 அளவுக்கு கூடுதலாக உயா்த்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாஜக அரசு புதிய நிதியாண்டில் ரூ.1.25 லட்சம் கோடி கூடுதல் வரி விதிப்பை செய்திருப்பது சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மிகப்பெரிய சவாலாக்கியுள்ளது என்றும் ரன்தீப் சுா்ஜேவாலா கூறினாா்.