இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு வழங்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனை
 இரட்டை இலைச் சின்னம் பெற லஞ்சம்: டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்
Updated on
1 min read

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை வி.கே.சசிகலா அணிக்கு வழங்க தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அமமுக தலைவர் டி.டி.வி. தினகரனை வெள்ளிக்கிழமை (ஏப். 8) விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
 தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தினகரன் உறவினர் வி.கே. சசிகலா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் கட்சியின் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமை கோரியதால், அதிமுகவின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.
 இடைத்தேர்தலில் வி.கே.சசிகலா அணிக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பாக இடைத்தரகர் சுகேஷ் என்ற சந்திரசேகர் கடந்த 2017-இல் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
 இதன்பின் தினகரனும், அவருடைய உறவினர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டனர். ரூ.50 கோடி பேரம் நடைபெற மல்லிகார்ஜுனா உதவினாராம்.
 இந்நிலையில் டிடிவி.தினகரன் மற்றும் வி.கே. சசிகலா ஆகிய இருவரும் 2017 ஆகஸ்ட் மாதத்தில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
 இந்த வழக்கில் டிடிவி. தினகரனை வெள்ளிக்கிழமை (ஏப்.8) தில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் வாக்குமூலம் அளித்ததும், சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
 முக்கிய சாட்சி தற்கொலை
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த சென்னை வழக்குரைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
 திருவேற்காடு சுந்தரசோழபுரத்தைச் சேர்ந்த கோபிநாத் (31), வழக்குரைஞர். பாமகவின் திருவேற்காடு அமைப்புச் செயலர்.
 வீட்டின் எதிரே உள்ள குடிசைக்குள் செவ்வாய்க்கிழமை இரவு கோபிநாத் தூங்கச் சென்றாராம். அவருடைய தங்கை புதன்கிழமை காலை சென்றபோது கோபிநாத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
 திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். கடந்த 2017-இல் அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் இரட்டை இலையை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கியது.
 தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து இரட்டை இலை சின்னத்தை பெற முயன்றதாக தில்லி காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவினர் டிடிவி தினகரன், தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தில்லி அமலாக்கத்துறையும் ஒரு வழக்குப் பதிவு செய்தது.
 இவ் வழக்கின் முக்கிய சாட்சியாக கோபிநாத் உள்ளார். இதனால் அவருக்கு நெருக்கடி இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com